கம்பம் சேனை ஓடையின் குறுக்கே புதிய பாலம் கட்ட நடவடிக்கை; நகராட்சி தலைவர் தகவல்
கம்பத்தில் சேனை ஓடையின் குறுக்கே புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி தலைவர் தெரிவித்தார்.
கம்பம் ஆடு வதைக்கூடம் அருகில் சேனை ஓடை பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக கம்பம் புதிய பஸ் நிலையம் மற்றும் நகர் பகுதிக்குள் அனைத்து வாகனங்களும் செல்கின்றன. ஆனால் சேனை ஓடை பாலம் மிகவும் குறுகலாகவும், வலுவிழந்து உள்ளதால் பாலத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய பாலம் அகலமாக கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து நகராட்சி தலைவர் வனிதா நெப்போலியன் தலைமையில் நகராட்சி ஆணையாளர் வாசுதேவன், உதவி பொறியாளர் சந்தோஷ்குமார், சுகாதார அலுவலர் அரசக்குமார், கட்டிட ஆய்வாளர் சலீம் ஆகியோர் நேற்று சேனை ஓடை பாலத்தில் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வுக்கு பிறகு நகராட்சி தலைவர் கூறுகையில், கம்பம் நகரில் நாளுக்குநாள் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கேற்றாற்போல் சாலை மற்றும் பாலங்களை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த வகையில் சேனை ஓடை பாலம் குறுகலாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பாலம் கட்டி பல ஆண்டுகள் ஆவதால் வலுவிழந்து உள்ளது. எனவே சேனை ஓடையில் புதிய பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் பாலம் கட்டுமான பணிகள் தொடங்கும் என்றார்.