கூடங்குளத்தில் மிதவை கப்பலை மீட்க கடலில் சாலை அமைக்கும் பணி மும்முரம்


கூடங்குளத்தில் மிதவை கப்பலை மீட்க கடலில் சாலை அமைக்கும் பணி மும்முரம்
x

கூடங்குளத்தில் தரைதட்டிய மிதவை கப்பலை மீட்க கடலில் சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

திருநெல்வேலி

வள்ளியூர்:

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. மேலும் இங்கு 4 அணு உலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 5, 6-வது அணு உலைகளுக்கான 4 நீராவி ஜெனரேட்டர்கள் ரஷிய நாட்டில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது. அவற்றில் 2 நீராவி ஜெனரேட்டர்களை கூடங்குளத்துக்கு மிதவை கப்பலில் கொண்டு சென்றனர். தொடர்ந்து மற்ற 2 நீராவி ஜெனரேட்டர்களையும் மிதவை கப்பலில் ஏற்றி, இழுவை கப்பல் மூலமாக கடந்த 8-ந்தேதி கூடங்குளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

கூடங்குளம் பகுதியில் நீராவி ஜெனரேட்டர்களுடன் மிதவை கப்பல் வந்தபோது இழுவை கப்பலுக்கும், மிதவை கப்பலுக்கும் இடையிலான இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டது. இதனால் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட மிதவை கப்பல், கடற்கரையில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் பாறை இடுக்கில் தரைதட்டி நின்றது. அதனை மீட்பதற்காக சென்னையில் இருந்து சிறப்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் பலனளிக்கவில்லை.

இதையடுத்து கடற்கரையில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் கடலில் தரைதட்டியுள்ள மிதவை கப்பல் வரையிலும் ராட்சத பாறாங்கற்கள், மணலை கொட்டி சாலை அமைத்து கிரேன் மூலம் நீராவி ஜெனரேட்டர்களை மீட்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 4 நாட்களாக கடலில் பாறாங்கற்கள், மணலை கொட்டி சாலை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே சேதமடைந்த மிதவை கப்பலுக்குள் தண்ணீர் புகுந்ததால் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கடலில் சாலை அமைத்து, நீராவி ஜெனரேட்டர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.


Next Story