தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணி மும்முரம்
தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை அதிகரித்து இருப்பதால், கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதாக மேயர் ஜெகன் பெரியசாமி கூறினார்.
பள்ளிக்கூடங்களில் ஆய்வு
தூத்துக்குடி வ.உ.சி. சாலையில் உள்ள மாநகராட்சி சி.வ.தொடக்கப்பள்ளி, சிவந்தாகுளம் நடுநிலைப்பள்ளியில் நடைபெறும் கட்டுமான பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி மாநகராட்சியில் 21 பள்ளிக்கூடங்கள் உள்ளன. தமிழக முதல்-அமைச்சர் எடுத்த நடவடிக்கைகளால் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சிவந்தாகுளம் நடுநிலைப்பள்ளியில் 1,100 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு எத்தனை மாணவர்கள் வந்தாலும் அவர்கள் சேர்க்கப்படுவார்கள். சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.1 கோடி செலவிலும், வ.உ.சி. ரோட்டில் உள்ள பள்ளிக்கூடத்தில் ரூ.45 லட்சத்து 50 ஆயிரம் செலவிலும் வகுப்பறை கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இதேபோன்று 5 பூங்காக்களும் பணிகள் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
பஸ் நிலையம்
தூத்துக்குடி பஸ் நிலையம் பணிகள் முடிக்கப்பட்டு ஜூன் மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இந்த பஸ் நிலையத்தில் ஒரே நேரத்தில் 29 பஸ்கள் நிற்க முடியும். நெல்லை, திருச்செந்தூர் மற்றும் டவுன் பஸ்கள் மட்டுமே இந்த பஸ் நியைத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
பஸ் நிலையத்தில் 110 கடைகள் உள்ளன. 798 இருசக்கர வாகனங்கள் நிறுத்த முடியும். 400 கார்களை நிறுத்த முடியும். இங்கு மாநகராட்சி மூலம் தானியங்கி முறையில் வாகன நிறுத்தும் இடம் செயல்பட உள்ளது.
ரூ.9 கோடியில் சாலைகள்
மடத்தூரில் இருந்து கடற்கரை வரை சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆசிய வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் ரூ.82 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் 4 கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பாதாள சாக்கடை திட்ட பணிகள் 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்த பணிகள் இன்னும் செயல்பாட்டுக்கு வராமல் உள்ளது. இந்த திட்டத்தில் தருவைகுளம் ரோட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு 21 எம்.எல்.டி கழிவுநீர் சென்றால்தான் சுத்திகரிக்க முடியும். தற்போது 10 எம்.எல்.டி கழிவுநீர் தான் செல்கிறது.
பழைய பாதாள சாக்கடை திட்டத்தில் வீடுகளுக்கு வழங்கப்பட்ட இணைப்பு குழாய்கள் உடைக்கப்பட்டு இருந்தால் மாநகராட்சி வாட்ஸ்அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மஞ்சப்பை திட்டம் வெற்றி பெற்று இருக்கிறது. பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு குறைந்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சரவணன், இளநிைல பொறியாளர் பாண்டி, சுகாதார அலுவலர் ராஜசேகர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
பொதுமக்களின் கருத்துகளை தெரிவிக்க...
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி பதவியேற்ற கடந்த ஓராண்டில் மாநகராட்சிக்கு உட்பட்ட 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட பகுதிகளில் சாலை மற்றும் வடிகால் வசதிகளை செய்து கொடுத்துள்ளோம். மாநகர மக்களுக்கு தற்போது கோடை காலத்திலும் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் சீர்மிகு நகரமாகவும், சிறந்த மாநகராட்சியாகவும் மாற்ற, மக்கள் தங்களின் கருத்துக்களை, 73977 31065 என்ற வாட்ஸ்-அப் எண் மூலமாக தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.