ரூ.3½ கோடியில் அவசர சிகிச்சை வார்டு அமைக்கும் பணி மும்முரம்


ரூ.3½ கோடியில் அவசர சிகிச்சை வார்டு அமைக்கும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 9 Jan 2023 12:15 AM IST (Updated: 9 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.3½ கோடியில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை வார்டு அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.3½ கோடியில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை வார்டு அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அவசர சிகிச்சை பிரிவு

கோத்தகிரி பஸ் நிலையம் அருகே அரசு ஆஸ்பத்திரி உள்ளது. கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த குக்கிராமங்களை சேர்ந்த நோயாளிகள் 250 பேர் தினமும் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு உள் நோயாளிகள், வெளி நோயாளிகள், மகப்பேறு, எக்ஸ்ரே, அறுவை சிகிச்சை, குழந்தைகள் சிகிச்சை, எலும்பு முறிவு சிகிச்சை, காசநோய், ரத்த வங்கி, சலுகை கட்டணத்தில் சி.டி. ஸ்கேன் வசதி, சித்த மருத்துவம் உள்ளிட்ட வார்டுகள் உள்ளன.

தற்போது ஆஸ்பத்திரியில் எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் பணியமர்த்தப்பட்டு உள்ளதால், விபத்துகள் ஏற்படும் போது எலும்பு முறிவு ஏற்பட்டு காயமடைந்தவர்களுக்கு இங்கேயே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு இல்லாமல் இருந்ததால், விபத்துகளில் காயமடைந்து சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு முதலுதவி மட்டும் செய்து, மேல் சிகிச்சைக்காக ஊட்டி அல்லது கோவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வந்தனர். இதனால் அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்பட்டன.

ரூ.3½ கோடி நிதி ஒதுக்கீடு

இந்தநிலையில் கோத்தகிரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, அரசு ஆஸ்பத்திரியில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு அமைக்க பொதுப்பணித் துறை மூலம் ரூ.3 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரி நுழைவுவாயில் அருகே இருந்த பழைய கட்டிடங்களை இடித்து, நிலத்தை சமப்படுத்தும் பணிகள் கடந்த நவம்பர் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதனால் நுழைவுவாயில் மூடப்பட்டு, சித்த மருத்துவமனை வழியாக ஆஸ்பத்திரிக்குள் செல்லும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

தற்போது கட்டிடம் கட்டுவதற்காக அஸ்திவாரம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது,கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் வெளி நோயாளிகளுக்காக செயல்பட்டு வந்த புதிய கட்டிடத்தில் இருந்து அருகே மற்றொரு கட்டிடத்திற்கு வெளி நோயாளிகள் பிரிவு மாற்றப்பட்டது. தற்போது அந்த கட்டிடம் பொதுப்பணித்துறையால், கூடுதல் அவசர சிகிச்சை பிரிவாக மாற்றி அமைக்கப்பட்டது. இதில் அதி நவீன வசதிகள் கொண்ட 5 படுக்கைகள், 24 மணி நேர ஆக்சிஜன் வசதி, வென்டிலேட்டர்கள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இந்த பிரிவு நோயாளிகள் பயன்பாட்டிற்கு விரைவில் திறக்கப்பட உள்ளது என்றனர்.


Next Story