நாடுகாணி- அட்டி இடையே பாலம் கட்டும் பணி மும்முரம்-பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
நாடுகாணி- அட்டி இடையே இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போக்குவரத்து தடைபட்ட நிலையில் புதிய பாலம் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கூடலூர்
நாடுகாணி- அட்டி இடையே இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போக்குவரத்து தடைபட்ட நிலையில் புதிய பாலம் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உடைந்த பாலம்
கூடலூர் தாலுகா நாடுகாணியில் இருந்து அட்டி வழியாக தேவாலாவுக்கு இணைப்பு சாலை செல்கிறது. சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் அத்தியாவசியம் மற்றும் அடிப்படைத் தேவைகளுக்காக தினமும் கூடலூர் வந்து செல்கின்றனர். இதனால் வாகன போக்குவரத்து மிகுந்த பகுதியாக உள்ளது.
இதேபோல் பள்ளிக்கூட மாணவ- மாணவிகளும் தினமும் காலை, மாலையில் நடந்து சென்று வருகின்றனர். இந்த நிலையில் நாடுகாணியில் இருந்து அட்டி திரும்பும் இடத்தில் ஆற்று வாய்க்கால் செல்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடர்கன மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிமெண்ட் பாலம் உடைந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வந்தனர்.
பணி மும்முரம் - மகிழ்ச்சி
தொடர்ந்து நிதி ஒதுக்கி புதிய பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் நிதி ஒதுக்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக கூடலூர் எம்எல்ஏ பொன். ஜெயசீலனிடம் கிராம மக்கள் முறையிட்டனர். இதைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.22 லட்சம் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த மாதம் புதிய சிமெண்ட் பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.
தற்போது பணிகள் 75 சதவீதம் வரை நடைபெற்றுள்ளது. தொடர்ந்து பாலம் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பாலம் உடைந்து கிடந்ததால் சிறிய வாகனங்கள் மட்டுமே இயக்க முடிந்தது. அவசர காலங்களில் பெரும் சிரமம் ஏற்பட்டு வந்தது. தற்போது புதிய பாலம் கட்டுவதால் நீண்ட கால கோரிக்கைக்கு தீர்வு கிடைத்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.