தேரோடும் வீதியில் ரூ.6½ கோடி மதிப்பில் புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணி
திருவாரூர் தியாகராஜர் கோவில் தேரோடும் வீதியில் ரூ.6½ கோடி மதிப்பில் புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
திருவாரூர் தியாகராஜர் கோவில் தேரோடும் வீதியில் ரூ.6½ கோடி மதிப்பில் புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தேரோடும் வீதிகளில் மின் நிறுத்தம்
பஞ்ச பூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும் சர்வதேச பரிகாரத் தலமாகவும் சைவ சமயத்தின் தலைமை பீடமாக திருவாரூர் தியாகராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உலக புகழ்பெற்ற ஆழித்தேரோட்டம் ஆண்டு தோறும் நடத்தப்படுவது வழக்கம். 96 அடி உயரம் 350 டன் எடை கொண்ட பெருமை வாய்ந்த தேராக இந்த ஆழித்தேரபார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தேரோட்டம் நடைபெறும் பொழுது தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்கள் பல்வேறு நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தேரோட்டத்தினை காண்பதற்காக திருவாரூருக்கு வருவார்கள்.
ஆழித்தேரோட்டத்தின் போது தேரோடும் வீதிகளான கீழ வீதி, மேலவீதி, வடக்கு வீதி, தெற்கு வீதி ஆகிய 4 வீதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்தடை செய்யப்படும். இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமத்தை சந்தித்து வந்தனர். மேலும் தேரோட்டத்தின் போது மின்தடை இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் அரசு மற்றும் பூண்டி. கே. கலைவாணன் எம்.எல்.ஏ.விடம் கோாிக்கை விடுத்திருந்தனர்.
ரூ.6½ கோடியில் .....
இதையடுத்து 3 கிலோ மீட்டருக்கும் கீழ் உள்ள தேரோடும் வீதிகளில் மின்கம்பங்களை அகற்றி புதைவட மின்கம்பிகளாக மாற்ற வேண்டும் என்று கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். மேலும் கடந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் தேர் திருவிழாவின் போது மின்கம்பி உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேர் ஓடும் முக்கிய வீதிகளில் புதைவட மின்கம்பிகள் வழியாக் மின்சாரம் எடுத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி திருவாரூர் மின்வாரியம் மூலம் ரூ.6.5 கோடி மதிப்பில் 5 டெண்டர் விடப்பட்டு தற்போது 4 டெண்டர்கள் முடிந்து ஒப்பந்தத்திற்கான பணிகள் நடந்து வருகிறது.
பூமிக்கடியில் மின்கம்பிகள்
மீதி உள்ள 1 குறைந்த அழுத்த மின்கம்பிகள் டெண்டர் மறுமதீப்பீட்டு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. அனைத்து ஒப்பந்த பணிகள் முடிந்தவுடன் இந்த மாதம் (ஜூன்) இறுதிக்குள் பணிகள் தொடங்கப்பட்டு கள ஆய்வுகள் நடத்தப்படும். அதனைத் தொடர்ந்து, 6 மாதகாலத்திற்குள் பணிகளை முடித்திட அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவாரூரை சேர்ந்த சமூக ஆர்வலர் கருணாநிதி கூறுகையில், பொதுவாக திருவாரூர் தியாகராஜர் கோவில் தேரோட்டம் கோடைகாலமான மார்ச், ஏப்ரல் மாதங்களில் தான் நடக்கிறது. இந்த நேரத்தில் மின்தடை என்பது மக்களால் பொருத்து கொள்ள முடியாத ஒன்றான இருக்கும்.
தற்போது அரசு தேரோடும் வீதியில் பூமிக்கடியில் மின்கம்பிகள் கொண்டு செல்லப்படும் என்று அறிவித்துள்ளது. இது மகிழ்ச்சியான திட்டம். பெரும் இயற்கை இடர்பாடு ஏற்படும் போது மின்கம்பங்கள் உடைந்து மின்கம்பி ஆபத்தான முறையில் காணப்படும். இதனால் மின்சாரம் தாக்கும் நிலையும் ஏற்படும். பூமிக்கடியில் மின்வினியோகம் கொண்டு செல்வதால் எந்த இடர்பாடும் ஏற்படபோவதில்லை. திருவாரூருக்கு கொண்டு வந்த திட்டங்களில் இந்த திட்டம் மிகவும் வரப்பிரசாதம் ஆகும் என்றார்.