அரசு பொருட்காட்சி அரங்குகள் அமைக்கும் பணி; மேயர், துணை மேயர் தொடங்கி வைத்தனர்


அரசு பொருட்காட்சி அரங்குகள் அமைக்கும் பணி; மேயர், துணை மேயர் தொடங்கி வைத்தனர்
x

நெல்லையில் அரசு பொருட்காட்சி அரங்குகள் அமைக்கும் பணியை மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

திருநெல்வேலி

நெல்லையில் அரசு பொருட்காட்சி நடைபெறுகிறது. இதற்கான அரங்கம் அமைக்கும் பணியை மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அரசு பொருட்காட்சி

நெல்லை டவுனில் அரசு சார்பில் ஆண்டு தோறும் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலையொட்டி பொருட்காட்சி நடைபெற வில்லை.

இந்த ஆண்டு அரசு பொருட்காட்சி நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. வருகிற ஆகஸ்டு மாதம் தொடங்கி 45 நாட்கள் அரசு பொருட்காட்சி நடைபெறுகிறது.

அரங்குகள் அமைக்கும் பணி

இதையொட்டி நெல்லை டவுன் வ.உ.சி. மணிமண்டபம் அருகில் உள்ள காலி இடத்தில் பொருட்காட்சி அரங்கம் அமைக்கப்படுகிறது. இதற்கான பூமி பூஜை மற்றும் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது.

இதில் நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு பந்தல்கால் நட்டு பணியை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டல தலைவர்கள் ரேவதி பிரபு, மகேசுவரி, கவுன்சிலர்கள் கந்தன், சுப்பிரமணியன், மன்சூர், அல்லாபிச்சை, மாரியப்பன், தி.மு.க. நிர்வாகி மூளிக்குளம் பிரபு, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயஅருள்பதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இங்கு அரசு துறைகளின் திட்டங்களை பொது மக்கள் தெரிந்து கொள்வதற்கான அரங்குகள் அமைக்கப்படுகிறது. மேலும் பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய ராட்டினங்கள், பொருட்கள் வாங்குவதற்கு உரிய கடைகள் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களும் இடம்பெறுகிறது.


Next Story