ரூ.73 லட்சத்தில் தரைமட்ட பாலம் அமைக்கும் பணி தொடங்கியது
திருவட்டாரில் பரளியாற்றின் குறுக்கே ரூ.73 லட்சத்தில் தரைமட்ட பாலம் அமைக்கும் பணி தொடங்கியது.
திருவட்டார்:
திருவட்டாரில் பரளியாற்றின் குறுக்கே ரூ.73 லட்சத்தில் தரைமட்ட பாலம் அமைக்கும் பணி தொடங்கியது.
தரைமட்ட பாலம்
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் மேற்கு நடை பாதையையொட்டி பரளியாறு ஓடுகிறது. ஆதிகேசவ பெருமாள் கோவில் பங்குனி திருவிழாவின் போது இந்த பரளியாற்றின் சப்பாத்து பாதை வழியாக ஆதிகேசவ பெருமாளும், கிருஷ்ணசாமியும் கருட வாகனத்தில் பக்தர்கள் புடை சூழ மூவாற்றுமுகம் ஆற்றில் ஆறாட்டுக்கு எழுந்தருளுவார்கள். பின்னர் ஆறாட்டு முடிந்ததும் சுவாமி சிலைகள் இதே வழியாக கோவிலை வந்தடையும்.
சில வருடங்களுக்கு முன்பு பெருவெள்ளத்தால் இந்த சப்பாத்து பாதை துண்டிக்கப்பட்டது. இதில் பாதிக்கும் மேற்பட்ட பகுதி இழுத்துச் சென்றது. இதனால் திருவிழாவின் போது தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு, அதன் வழியாக மக்கள் சென்று வந்தனர். இந்தநிலையில் தரைப்பாலம் அமைக்க விஜய் வசந்த் எம்.பி. தனது தொகுதியில் இருந்து ரூ.73 லட்சத்து 6 ஆயிரத்து 810 நிதி ஒதுக்கினார்.
பணி தொடங்கியது
இதனை தொடர்ந்து திருவட்டாரில் தரைப்பாலம் கட்டும் பணி தொடங்கியது. ஆதிகேசவ பெருமாள் கோவில் மற்றும் அருகில் உள்ள பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டதை தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் முதற்கட்ட பணி தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ஜெபா தலைமை தாங்கினார். அகில இந்திய காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமார் பணியை தொடங்கி வைத்தார்.
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் மேலாளர் மோகன்குமார், மாவட்ட காங்கிரஸ் செயலாளர்கள் சிவசங்கர், குமார், மூத்த தலைவர் தங்க நாடார், செறுகோல் ஊராட்சி முன்னாள் தலைவர் கனகராஜ், திருவட்டார் வட்டார முன்னாள் தலைவர் ஜெகன்ராஜ், திருவட்டார் வட்டார காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் ஜாண் வெர்ஜின், வசந்தகுமாரி ரங்கசாமி, காட்டாத்துறை காங்கிரஸ் தலைவர் டாம் டிக்சன், தக்கலை வட்டார காங்கிரஸ் தலைவர் பிரேம்குமார், குமாரபுரம் பஞ்சாயத்து தலைவர் ஜாண் கிறிஸ்டோபர், ஏற்றக்கோடு ஊராட்சி காங்கிரஸ் தலைவர் லெனின், திருவட்டார் நாயர் சங்க ஆலோசகர் பாலகிருஷ்ணன், தளியல் முத்தாரம்மன் கோவில் செயற்குழு உறுப்பினர் ரமேஷ், அன்னபூர்ணா சேவா அறக்கட்டளை தலைவர் டாக்டர் சந்திரமோகன், ஒப்பந்ததாரர் பீட்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.