சேலத்தில் கருணாநிதி உருவச்சிலை அமைக்கும் பணி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்
சேலத்தில் கருணாநிதி உருவச்சிலை அமைக்கும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். பின்னர் அவர் அங்கிருந்து ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்துக்கு காரில் புறப்பட்டு சென்றார். வழியில் பெரியார் மேம்பாலத்தை கடந்து சென்ற போது, முதல்-அமைச்சருடன் காரில் வந்தவர்கள், மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு அண்ணா பூங்கா அருகே உருவச்சிலை அமைக்கும் பணி நடைபெறுவது குறித்து தகவல் தெரிவித்தனர்.
உடனே காரை நிறுத்துமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். அதே நேரத்தில் சாலையின் நடுவில் தடுப்புகள் இருந்ததால், காரில் இருந்தவாறே கட்டுமான பணியை அவர் பார்வையிட்டார். சுமார் ஒரு நிமிடம் கார் அங்கு நிறுத்தப்பட்ட நிலையில், அண்ணா பூங்கா பஸ் நிறுத்தம் பகுதியில் கூடியிருந்த பொதுமக்கள், முதல்-அமைச்சர் வாழ்க என்று கோஷம் எழுப்பினர். இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் அங்கிருந்து காமலாபுரம் விமான நிலையத்துக்கு புறப்பட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.