ரூ.3 கோடியில் மணிலா மரச்செக்கு மைய கட்டுமான பணி; கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலையில் ரூ.3 கோடியில் மணிலா மரச்செக்கு மைய கட்டுமான பணியை கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலையில் ரூ.3 கோடியில் மணிலா மரச்செக்கு மைய கட்டுமான பணியை கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.
உழவர் உற்பதியாளர் கூட்டமைப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆண்டு ஒன்றிற்கு 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மணிலா சாகுபடி செய்யப்பட்டு, 70 ஆயிரம் டன் மணிலா பருப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. மணிலா உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வருமானம் இருமடங்கு ஆவதற்கு மணிலா பருப்பு மதிப்புக்கூட்டப்பட்டு மணிலா சமையல் எண்ணெயாக 30 ஆயிரம் டன் ஆண்டு ஒன்றிற்கு உற்பத்தி செய்யப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மணிலா விவசாயிகளை பங்குதாரர்களாக கொண்டு இயங்கி வரும் 25 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை ஒன்றிணைத்து திருவண்ணாமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் நாட்டு மரச்செக்கு கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஒரு வணிக முத்திரை 'அதரா' என்ற பெயரில் வணிகம் செய்திட திருவண்ணாமலை தாலுகா தெள்ளானந்தல் கிராமத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையால் திருவண்ணாமலை மாவட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்புக்காக ரூ.3 கோடியே 20 லட்சம் மதிப்பில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மணிலா மரச்செக்கு சமையல் எண்ணெய் சந்தைப்படுத்துதல் ஊக்குவிப்பு மையம் மற்றும் நவீன சிப்பம் கட்டும் அலகு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.
கலெக்டர் ஆய்வு
இந்த பணியினை மாவட்ட கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) அரகுமார், மாவட்ட விற்பனைக்குழு செயலாளர் சந்திரசேகர், தமிழ்நாடு மாநில வேளாண் விற்பனை வாரியம் உதவி பொறியாளர் வடிவேல், திருவண்ணாமலை மாவட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்பு இயக்குநர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.