பனியர்பாடி- ஸ்டாலின் நகர் இடையே ரூ.15 லட்சத்தில் புதிய பாலம் கட்டும் பணி
பலத்த மழையால் பனியர்பாடி- ஸ்டாலின் நகர் இடையே உடைந்த பாலத்துக்கு பதிலாக ரூ.15 லட்சத்தில் புதிய பாலம் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கூடலூர்
பலத்த மழையால் பனியர்பாடி- ஸ்டாலின் நகர் இடையே உடைந்த பாலத்துக்கு பதிலாக ரூ.15 லட்சத்தில் புதிய பாலம் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பலத்த மழையால் உடைந்த பாலம்
கூடலூர் தாலுகா பகுதியில் ஆண்டுதோறும் 6 மாதங்கள் தொடர் மழை பெய்வது வழக்கம். இதே போல் கடந்தாண்டு பெய்த தொடர் கனமழையால் கூடலூர் நகராட்சிக்குட்பட்ட சளிவயல் பனியர்பாடியில் இருந்து ஸ்டாலின் நகருக்கு செல்லும் சாலையின் குறுக்கே ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தொடர்ந்து அதன் மீது இருந்த பாலம் உடைந்து விழுந்தது. இதனால் சுற்று வட்டார பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து புதிய பாலம் கட்டி தர வேண்டும் என வலியுறுத்தினர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் முறையிடப்பட்டது. மேலும் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. இதனால் புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டி தர வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனர்.
ரூ.15 லட்சத்தில் புதிய பாலம்
இதைத்தொடர்ந்து பனியர்பாடி - ஸ்டாலின் நகர் புதிய பாலம் கட்ட நகராட்சி நிர்வாகம் ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கியது. இதேபோல் ரூ.8 லட்சம் செலவில் நீர் தேக்க தொட்டியும் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புதிய பாலம், நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதை கூடலூர் நகராட்சி தலைவர் பரிமளா, ஆணையாளர் பிரான்சிஸ் சேவியர், துணைத்தலைவர் சிவராஜ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து பணிகள் தரமாக இருக்க வேண்டுமென பணி ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டனர். ஆகியும் போது கவுன்சிலர் ஜெயலிங்கம் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, பிளாஸ்டிக் தொட்டியில் குடிநீர்விநியோகிக்கப்பட்டது. இதனால் தட்டுப்பாடு நிலவியது. பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு புதிய நீர் இயக்கத் தொட்டி கட்டுவதால் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதேபோல் பாலமும் கட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.