புதிய பாலங்கள் அமைக்கும் பணி: அம்பையில் போக்குவரத்து மாற்றம்


புதிய பாலங்கள் அமைக்கும் பணி: அம்பையில் போக்குவரத்து மாற்றம்
x

புதிய பாலங்கள் அமைக்கும் பணியை முன்னிட்டு அம்பையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றியமைக்கப்படுகிறது.

திருநெல்வேலி

அம்பை:

புதிய பாலங்கள் அமைக்கும் பணியை முன்னிட்டு அம்பையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றியமைக்கப்படுகிறது.

ஆலோசனை கூட்டம்

அம்பை நதியுண்ணிக் கால்வாய் குறுக்கே கிருஷ்ணன் கோவில் அருகில் உள்ள பாலம் மற்றும் தீர்த்தபதி மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள சிறிய பாலங்கள் இரண்டும் அகற்றப்பட்டு நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிய பாலங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது.

இதையடுத்து போக்குவரத்து மாற்றி அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் அம்பை போலீஸ் நிலையத்தில் துணை சூப்பிரண்டு (பொ) வெங்கடேஷன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக தென்காசி கோட்ட மேலாளர் சண்முகம், பாபநாசம் கிளை மேலாளர் சுரேஷ், நெடுஞ்சாலைத்துறை உதவிப்பொறியாளர் விஷ்ணுவர்த்தன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மகேஷ்குமார், சுஜித் ஆனந்த், நகராட்சி சுகாதார மேற்பார்வையாளர் சிதம்பர ராமலிங்கம், விவசாயிகள் சங்கத்தினர், பொதுப்பணித்துறை, நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போக்குவரத்து மாற்றம்

கூட்டத்தில் புதிய பாலம் பணிகள் நடைபெறும் 2 மாத காலத்தில் போக்குவரத்தை மாற்றி அமைப்பதுக் குறித்து கலந்தாலோசித்து முடிவெடுத்தனர்.

இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் வழங்கப்பட்ட செய்திக்குறிப்பில், "நாளை (வியாழக்கிழமை) முதல் கல்லிடைக்குறிச்சியில் இருந்து அம்பை வரும் இலகுரக வாகனங்கள் தாமிரபரணி ஆற்றுச்சாலை வழியாகவும், முக்கூடலில் இருந்து வரும் இலகுரக வாகனங்கள் தீர்த்தபதி பள்ளி அருகே அமைக்கப்பட்டுள்ள மாற்றுப்பாதை வழியாகயும் நகருக்குள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கல்லிடைக்குறிச்சி வழியாக அம்பை வரும் அரசுப் பஸ்கள் கிருஷ்ணன் கோவில் அருகே அமைக்கப்படும் திடல் வரை வந்து திரும்பிச் செல்லும். பாபநாசம், தென்காசியில் இருந்து நெல்லை செல்லும் அரசு பஸ்கள் மற்றும் வள்ளியூர், நாகர்கோவில் செல்லும் பஸ்கள் வாகைக்குளம் விலக்கு வழியாக அம்பை யூனியன் அலுவலகம் வழியாக இடைகால், பாப்பாக்குடி வழியாகச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்புத்தர கேட்டுக்கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story