புதிய சாலைகள் அமைக்கும் பணி
ஜோலார்பேட்டை அருகே ரூ.86¼ லட்சத்தில் புதிய சாலைகள் அமைக்கும் பணி தொடங்கியது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பாச்சல் ஊராட்சியில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.71 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பீட்டில் தார் சாலை, கூத்தாண்டகுப்பம் ஊராட்சியில் ரூ.14 லட்சத்து 89 ஆயிரம் மதிப்பீட்டில் 500 மீட்டர் தொலைவிற்கு சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். க.தேவராஜி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமார் வரவேற்றார்.
விழாவில் கலெக்டர், எம்.எல்.ஏ. ஆகியோர் புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர். அதைத் தொடர்ந்து கேத்தாண்டப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் ரூ.12 லட்சத்தில் நியாய விலைக்கடை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, ஊரக வளர்ச்சித்துறை செயற் பொறியாளர் எழில்கவிதா, உதவி செயற் பொறியாளர் பழனிச்சாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே. சதீஷ்குமார், மாவட்ட கவுன்சிலர்கள் கவிதாதண்டபாணி, சிந்துஜா ஜெகன், ஒன்றிய கவுன்சிலர் உமாகன்ரங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரை, மணவாளன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயலட்சுமிசுரேஷ், திருப்பதி, ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன் உள்பட துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.