புதிய பள்ளி கட்டிடம் கட்ட நடவடிக்கை
மாங்காடு கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்று 4-வது வார்டு கவுன்சிலர் தில்லைபுஷ்பம் பாலு தெரிவித்தார்.
ராமேசுவரம்,
மாங்காடு கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்று 4-வது வார்டு கவுன்சிலர் தில்லைபுஷ்பம் பாலு தெரிவித்தார்.
4-வது வார்டு கவுன்சிலர்
ராமேசுவரம் நகராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் தில்லைபுஷ்பம்பாலு. இவர் தனது வார்டுக்கு உட்பட்ட சம்பை, மாங்காடு ஓலைக்குடா உள்ளிட்ட பகுதிகளில் மக்களுக்கு தேவையான பல்வேறு பணிகளை செய்து வருகிறார்.
இது குறித்து 4-வது வார்டு கவுன்சிலர் தில்லை புஷ்பம்பாலு கூறியதாவது:-
மாங்காடு கிராமத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் பாழடைந்து கிடந்த கழிப்பறை கட்டிடம் நகராட்சி மூலம் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளது. அது போல் சம்பை, மாங்காடு கிராமம் இடையே எனது சொந்த முயற்சியில் மின்வாரிய அதிகாரிகள் மூலம் புதிதாக 4 மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து மின் ஒயர்களும் சரி செய்யப்பட்டுள்ளது.
புதிய பள்ளி கட்டிடம்
மேலும் மாங்காடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்திற்கு புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்றும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கத்திடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. புதிய கட்டிடம் கட்டுவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றது.
மாங்காடு-சம்பை கிராமம் பிரியும் சாலையில் உள்ள மயானத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் கட்டவும் நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஓலைக்குடா கிராமத்தில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஓலைக்குடா லைட் ஹவுஸ் முதல் அந்தோணியார் கோவில் வரையிலும் புதிதாக சாலை அமைக்கவும் நகரமன்ற கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. சம்பை, மாங்காடு கிராமத்தில் குடிதண்ணீர் குழாய் அமைக்கவும் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
சம்பை கிராமத்தில் சுகாதார மையம் அமைக்க ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கத்திடம் மனு கொடுத்து அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. அதுபோல் சம்பை ஓலைக்குடா கிராமத்தில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்றும் சட்டமன்ற உறுப்பினரிடமும் மற்றும் நகர சபை சேர்மனிடமும் மனு கொடுக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.
தடுப்புச்சுவர்
ஓலைக்குடா, சங்குமால் கடற்கரை பகுதியில் கடல் அரிப்பை தடுக்கும் விதமாக தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்றும் நகர்மன்ற கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. சம்பை கிராமத்தில் மக்களுக்கு பொதுவாக உள்ள திருமண மண்டபத்தை சுற்றி பேவர் பிளாக் கற்களால் சாலை அமைக்க வேண்டும் என்றும் மனு கொடுக்கப்பட்டுள்ளது. சம்பை கிராமத்தில் செயல்பட்டு வரும் 40 ஆண்டுகால பள்ளி கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்ட ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாங்காடு கிராமத்தில் உயர் நீர்தேக்க தொட்டி ஒன்று கட்டித் தர வேண்டும் என்றும் சட்டமன்ற உறுப்பினரிடமும் மற்றும் நகர மன்ற கூட்டத்திலும் மனு கொடுக்கப்பட்டுள்ளது. 4-வது வார்டுக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நகரசபை சேர்மன் நாசர் கான், ஆணையாளர் கண்ணன் ஆகியோரின் முழு ஒத்துழைப்புடன் முறையாக தெரு விளக்குகள் எரிய விடப்பட்டும், பொது மக்களுக்கு தேவையான குடிதண்ணீர் முறையாக வழங்கப்பட்டு வருவதுடன் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் எங்கும் குப்பைகள் இல்லாத அளவிற்கு முழுமையாக தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.