ரூ.16 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி
ராமாபுரம் கிராமத்தில் ரூ.16 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணியை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த செங்கல்நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட ராமாபுரம் கிராமத்தில் மாவட்ட கவுன்சிலர் நிதியில் இருந்து ரூ.16 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு வருகிறது. அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள் கட்டியுள்ள ஒரு சிலர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை கட்டவிடாமல் மிரட்டுவதாகக்கூறி கிராம மக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் தெரிவித்தனர்.
அதன்பேரில் மாவட்ட ஊராட்சி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வஜ்ரவேல், சித்ரா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணியை யாராவது தடுத்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக எச்சரித்தனர். மேலும் ஆக்கிரமிப்பு செய்துள்ள அரசு புறம்போக்கு நிலத்தை அளவு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினர்.
அப்போது ஒன்றியக்குழு உறுப்பினர் முனியம்மாள் பிச்சாண்டி, ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன், ஊராட்சி செயலாளர் பழனி மற்றும் கிராம மக்கள் உடனிருந்தனர்.