பயணிகள் நிழற்குடை கட்டும் பணி மும்முரம்
‘தினத்தந்தி’யில் செய்தி எதிரொலியால் மசினகுடியில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
கூடலூர்,
'தினத்தந்தி'யில் செய்தி எதிரொலியால் மசினகுடியில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
பயணிகள் நிழற்குடை
மசினகுடியில் இருந்து ஊட்டி, கூடலூருக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. சுற்றுவட்டார கிராமப்புறங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் பல்வேறு தேவைகளுக்காக வெளியூர்களுக்கு சென்று திரும்புகின்றனர். இதுதவிர சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். இதனால் மசினகுடி பஸ் நிலையத்துக்கு ஏராளமான பயணிகள் வருகின்றனர்.
ஆனால், அங்கு அடிப்படை வசதிகள் இல்லை. குறிப்பாக பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் திறந்தவெளியில் நிற்கின்ற சூழல் காணப்பட்டது. ஏற்கனவே, தகரக் கொட்டகை அமைக்கப்பட்டு இருந்தது. அதில் போதிய வசதி இல்லாததால் பயணிகள் அதை பயன்படுத்துவதில்லை. இதனால் மழை மற்றும் வெயிலில் நின்று பயணிகள் சிரமப்பட்டு வந்தனர். இதனால் பயணிகள் நிழற்குடை கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர்.
பணி மும்முரம்
இதுதொடர்பாக தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக கூடலூர் ஊராட்சி ஒன்றியம் மூலம் ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து மசினகுடியில் பயணிகள் நிழற்குடை கட்டிடம் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு காணப்பட்டு உள்ளதாக பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர். மேலும் உரிய நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து கூடலூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதரன், மோகன் குமாரமங்கலம் ஆகியோர் கூறும்போது, மசினகுடி பஸ் நிலையத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.5 லட்சம் செலவில் பயணிகள் நிழற்குடை கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இன்னும் சில வாரங்களில் பணிகள் நிறைவு பெறும் என்றனர்.