3 இடங்களில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி மும்முரம்
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் மண் சரிவை தடுக்க 3 இடங்களில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
கோத்தகிரி,
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் மண் சரிவை தடுக்க 3 இடங்களில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
மண் சரிவு
கோத்தகிரி நெடுஞ்சாலைத் துறை சார்பில், பருவமழைக்கு முன்பு மண் சரிவு ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புச் சுவர் கட்டுவது, மழைநீர் கால்வாய் அடைப்புகளை சுத்தம் செய்வது, குறுகிய வளைவுகளை விரிவாக்கம் செய்வது, சாலையோர தடுப்புச் சுவர்கள் மற்றும் மழைநீர் கால்வாய்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் டானிங்டன் முதல் கைத்தளா வரை மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ள 3 இடங்களில் சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. அங்கு மண் சரிவு ஏற்படுவதை தடுக்க 20 மீட்டர், 46 மீட்டர், 62 மீட்டர் நீளத்திற்கு தடுப்புச்சுவர் கட்டும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
குறுகிய வளைவுகள்
இதுகுறித்து கோத்தகிரி நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் சாமியப்பன் மற்றும் உதவி பொறியாளர் ரமேஷ் ஆகியோர் கூறும்போது, பருவமழை பெய்யும் போது மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடைபடுவதை தடுக்கும் வகையில், குறுகிய வளைவுகள் விரிவாக்கம் செய்யப்படுகிறது. சாலையோரங்களில் பாதுகாப்பு தடுப்புச் சுவர்கள் கட்டப்பட்டு வருகிறது.
இதுமட்டுமின்றி மழைநீர் வழிந்தோடி சாலைகள் சேதமடையாமல் இருக்க வேண்டி, சாலையின் இருபுறமும் அகலப்படுத்தி கான்கிரீட் தளம் அமைப்பது, மழைநீர் கால்வாய்கள் புதுப்பிப்பது, கால்வாய் அடைப்புகளை நீக்குவது உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே, பருவமழை காலத்தில் மண்சரிவு ஏற்படுவது குறைவதுடன், போக்குவரத்தும் தடைபடுவது தடுக்கப்படும் என்றனர்.