கடலங்குடி தலைப்பு வாய்க்காலில் மதகு கட்டும் பணி
கடலங்குடி தலைப்பு வாய்க்காலில் மதகு கட்டும் பணி
குடவாசல் அருகே உள்ள கடலங்குடி ஊராட்சியில் அரசலாற்றில் இருந்து பிரியும் கடலங்குடி தலைப்பு வாய்க்காலில் சிறு நீர்த்தேக்க மதகு கட்டும் பணி ரூ. 12 லட்சத்தில் கடந்த மே மாதம் தொடங்கப்பட்டது. இந்த பணி இதுவரை முடியவில்லை. குறிப்பாக நீர்த்தேக்க பலகை கூட பொருத்தப்படாமல் வாய்க்காலில் வரக்கூடிய தண்ணீர் வேறு வாய்க்காலுக்கு திருப்பி விடப்பட்டதால் கடலங்குடி பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் சாகுபடி செய்யாமல் நிலங்கள் தரிசாக உள்ளது. இந்த பகுதி விவசாயிகள் இதுவரை குறுவை சாகுபடி பணியை தொடங்க முடியாமல் உள்ளனர். இந்தநிலையில் நேற்று ஊராட்சி தலைவர் சிங்காரவேலு, ஒன்றியக்குழு உறுப்பினர் கோபி, உழவர் பேரியக்க மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் பக்கிரிசாமி மற்றும் விவசாயிகள் பழைய பலகையை போடக்கூடாது என்றும், உடனடியாக புதிய பலகை போட்டு விவசாயிகளுக்கு தண்ணீரை வழங்க வேண்டும் என்று ஒப்பந்தக்காரர்களிடம் கூறினர். மேலும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளரிடம், பணியை விரைந்து முடிக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் கூறினர். இதையடுத்து ஒரு வாரத்தில் பணியை முடித்து வாய்க்காலில் தண்ணீர் விடப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி கூறினார். இந்த மதகு கட்டும் பணியில் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.