நிலச்சரிவு அபாய பகுதியில் கட்டுமான பணி


நிலச்சரிவு அபாய பகுதியில் கட்டுமான பணி
x
தினத்தந்தி 2 Jun 2023 1:15 AM IST (Updated: 2 Jun 2023 1:16 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் அருகே நிலச்சரிவு அபாய பகுதியில் நடந்த கட்டுமான பணியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

நீலகிரி

குன்னூர்

குன்னூர் அருகே நிலச்சரிவு அபாய பகுதியில் நடந்த கட்டுமான பணியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

நீலகிரியில் கட்டுப்பாடுகள்

நீலகிரி மாவட்டம் மலை மாவட்டமாக உள்ளது. இதனால் பருவமழை காலங்களில் நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படுகிறது. இதை தடுக்கும் நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் கட்டிடங்கள் கட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை ஐகோர்ட்டு விதித்துள்ளது.

குறிப்பாக 1,500 சதுர அடி அளவிற்குள்ளும், 7 மீட்டர் உயரத்திற்குள்ளும் மட்டுமே கட்டிடங்களை கட்ட ஐகோர்ட்டு அனுமதி உள்ளது. மேலும் நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் எந்த ஒரு கட்டிடங்களும் கட்ட தடை உள்ளது. இந்த தடையை மீறி சிலர் கட்டிடங்களை கட்டி வருகின்றனர். இந்த கட்டிட பணிகளை புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் சென்று பணியை தடுத்து நிறுத்தி வருகிறார்கள்.

நிலச்சரிவு அபாயம்

இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள காட்டேரி பகுதி, நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் 40 ஆண்டுகளாக குடியிருப்பவர்களை காலி செய்ய சமீபத்தில் வருவாய்த்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது. ஆனால் காட்டேரி பகுதியில், எந்த ஒரு அனுமதியும் பெறாமல் விதியை மீறி நிலச்சரிவு அபாய பகுதியில் கட்டுமான பணிகள் நடப்பதாக குன்னூர் நகராட்சிக்கு புகார் வந்தது.

இதன் அடிப்படையில் நகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு செய்து, அங்கு கட்டிடம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பணிகள் தொடங்கும் போதே தடுத்து நிறுத்தாமல் பணிகள் நிறைவு பெறும் தருவாயில் நகராட்சி அதிகாரிகள் தடுத்து நிறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story