கட்டிட தொழிலாளி வீடு புகுந்து ரூ.1.35 லட்சம் திருட்டு
காயல்பட்டினம் அருகே கட்டிட தொழிலாளி வீடு புகுந்து ரூ.1.35 லட்சம் திருடிய மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் அருகே பூட்டியிருந்த கட்டிட தொழிலாளி வீடுபுகுந்து ரூ.1.35 லட்சத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
கட்டிட தொழிலாளி
காயல்பட்டினம் அருகிலுள்ள பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் சக்திவேல் (வயது 52). கட்டிட தொழிலாளி. இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் சின்ன ராஜாவுக்கு திருப்பதியில் வைத்து திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதன்படி அவரது திருமணத்திற்காக குடும்பத்தினருடன் கடந்த மாதம் 30-ந் தேதி இரவு வீட்டை பூட்டிவிட்டு திருப்பதி புறப்பட்டு சென்றார்.
ரூ.1.35 லட்சம் திருட்டு
அங்கு கடந்த 2-ந்தேதி அவரது மகனுக்கு திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு புதுமண தம்பதியர் மற்றும் குடும்பத்தினருடன் அவர் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவிலிருந்த பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அனைவரும் பதற்றத்துடன் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டிற்குள் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு, பொருட்கள் சிதறி கிடந்து.
பீரோவில் இருந்த ரூ.1.35 லட்சம் பணம் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து சக்திவேல் ஆறுமுகநேரி போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
மர்மநபருக்கு வலைவீச்சு
இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் வேல்பாண்டி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரை மற்றும் போலீசார் சம்பவ வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகியிருந்த மர்ம நபரின் ரேகைகளை பதிவு செய்து சோதனை நடத்தினர். மேலும், இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் பணத்தை திருடி சென்ற மர்ம நபரை தேடிவருகின்றனர்..