மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி
செய்யாறு அருகே மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
செய்யாறு
செய்யாறு தாலுகா கீழ்புதுப்பாக்கம் பசும்பொன் நகரை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 48), கட்டிட தொழிலாளி. இவர் கீழ்புதுப்பாக்கம் ராமலிங்கம் நகர் பகுதியில் உள்ள குமார் என்பவர் வீட்டில் டைல்ஸ் ஒட்டும் வேலையை செய்து வந்தார்.
நேற்று மாலை வேலை முடிந்தவுடன் அலுமினிய மட்டக்கோலை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த உயர் மின்கம்பியின் மீது உரசியதால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மகேந்திரனின் மகன் அருண் கொடுத்த புகாரின் பேரில் செய்யாறு சப்-இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.