மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி
சிவகாசி அருகே தாழ்வாக சென்ற மின்வயர் உரசியதில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்
சிவகாசி
சிவகாசி அருகே தாழ்வாக சென்ற மின்வயர் உரசியதில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கட்டிட தொழிலாளி
சிவகாசி அருகே உள்ள நடுவப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சதுரகிரி மகன் மாரிமுத்து (வயது 32). கட்டிட தொழிலாளியான இவருக்கு புளகம்மாள் (28) என்ற மனைவியும் 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர். மாரிமுத்து தனக்கு சொந்தமான காலி இடத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் புதிதாக வீடு கட்டும் பணியை தொடங்கினார். நேற்று அந்த வீட்டிற்கு தளம் அமைக்கும் பணி நடைபெற்றது. மாரிமுத்து உடன் வழக்கமாக பணியாற்றும் 9 கட்டிட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மின்சாரம் தாக்கி பலி
தளம் அமைக்கும் பணி முடிந்தவுடன் அதற்கு பயன்படுத்திய சிமெண்டு கலவை எந்திரத்தை தள்ளிச் சென்றபோது எதிர்பாராத நிலையில் தாழ்வாக சென்ற மின்சார வயரின் மீது எந்திரம் உரசியது. இதில் மாரிமுத்து மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
அவருடன் பணியாற்றிய பெரிய குளத்துபட்டியை சேர்ந்த சங்கு என்கிற சங்கையா (30) என்பவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இந்த விபத்து குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாழ்வாக செல்லும் மின்வயர்
ஈஞ்சார், நடுவப்பட்டி பகுதியில் மின்சார வயர்கள் மிகவும் தாழ்வாக செல்வதாகவும், அதனை சரி செய்து தரும்படி அப்பகுதி மக்கள் பலமுறை மின்வாரியத்திடம் புகார் தெரிவித்தும் மின்வாரியம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தற்போது மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.