கார் மோதி கட்டிட தொழிலாளி பலி
பழனி அருகே கார் மோதி கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
பழனி அருகே உள்ள கணபதிநகரை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 38). கட்டிட தொழிலாளி. அவருடைய மனைவி காளீஸ்வரி (31). இந்த தம்பதியின் மகன் முகேஷ் (7). நேற்று முன்தினம் முனியப்பன் தனது மனைவி, மகனுடன் கோவிலில் சாமி கும்பிடுவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் கீரனுர் சென்றார். அங்கு, அவர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் பழனி நோக்கி மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். கீரனூர் அருகே உள்ள புளியம்பட்டி பகுதியில் மோட்டார் சைக்கிள் வந்தது. அப்போது, தாராபுரம் நோக்கி வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. பின்னர் அந்த கார் நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து முனியப்பன் உள்பட 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். சிறிதுநேரத்தில் மனைவி, மகன் கண்ணெதிரே முனியப்பன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் காயமடைந்த காளீஸ்வரி, முகேஷ் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.