கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கட்டுமான தொழிலாளர்கள் போராட்டம்; ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க கோரிக்கை
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கட்டுமான தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் உயர்த்தி வழங்க வேண்டும். கட்டுமான பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்கள் இறந்து போனால், அவரது குடும்பங்களுக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர். இதற்கு மாவட்ட தலைவர் சீனுவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணை தலைவர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் கருப்பையன், மாவட்ட செயலாளர் பழனிவேல், இணை செயலாளர் திருமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் கட்டுமான தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் மனோரஞ்சிதம், வில்லியம்ஸ், நடராஜன், பாபு, சாந்தகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டு, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரனிடம் மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர்.