புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகள்
புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகள்
மயிலாடுதுறையில் ரூ.114 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகளை கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார்.
புதிய கலெக்டர் அலுவலகம்
மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில்தோட்டம் பால் பண்ணை பகுதியில் ரூ.114.48 கோடி மதிப்பீட்டில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அப்போது கலெக்டர் கூறியதாவது:-
கடந்த 19.1.2022 அன்று தலைமைச்செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ரூ.114 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் 6.54 ஏக்கர் நிலப்பரப்பில், 2,84,946 சதுர அடி கட்டிடப் பரப்பளவில் தரை மற்றும் 7 தளங்களுடன் 63 பல்வேறு துறைகளுக்கான அலுவலகங்களை உள்ளடக்கிய கட்டிடம் கட்ட முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
தரமாக முடிக்க வேண்டும்
இந்த புதிய கட்டிடத்தின் தரை தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளம் ஆகிய பணிகள் நடைபெற்று வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது என்றார். ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை இணை இயக்குனர் முருகண்ணன், உதவி செயற்பொறியாளர் பொது பணித்துறை (கட்டிடம் - பராமரிப்பு) அல்மாஸ் பேகம் ஆகியோர் உடனிருந்தனர்.