முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு


முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு
x

காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்தது.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்தது.

மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் 2022-2023-ம் கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த 4-ந் தேதி முதல் தொடங்கியது. அன்றைய தினம் விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், தேசிய மாணவர் படை, அந்தமான் நிக்கோபார் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு ஓதுக்கீடு நடைபெற்றது.

தொடர்ந்து 5-ந் தேதி வணிகவியல், தொழில் நிர்வாகவியல், பொருளியல் மற்றும் வரலாறு ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடந்தது. அறிவியல் பாடங்களான கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புவிஅமைப்பியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல் ஆகிய பாடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

15,539 பேர்

இந்த கலந்தாய்வு அழகப்பா அரசு கலைக்கல்லூரியின் முதல்வர் பெத்தாலட்சுமி தலைமையில் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோருடன் வந்தனர். கலந்தாய்வில் கணித பாடத்திற்கு 80 இடங்களுக்கு 1,271 பேரும், கணினி அறிவியல் பாடத்திற்கு 80 இடங்களுக்கு 3,229 பேரும், கணினி பயன்பாட்டியல் பாடத்திற்கு 40 இடங்களுக்கு 2,155 பேரும், இயற்பியல் பாடத்திற்கு 80 இடங்களுக்கு 1,709 பேரும், வேதியியல் பாடத்திற்கு 40 இடங்களுக்கு 2,385 பேரும், தாவரவியல் பாடத்திற்கு 40 இடங்களுக்கு 1,733 பேரும், விலங்கியல் பாடத்திற்கு 40 இடங்களுக்கு 2,154 பேரும், புவி அமைப்பியல் பாடத்திற்கு 40 இடங்களுக்கு 903 பேரும் சேர்த்து நேற்று ஒரே நாளில் 440 இடங்களுக்கு 15 ஆயிரத்து 539 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

2-ம் கட்ட கலந்தாய்வு

இதுகுறித்து கல்லூரி முதல்வர் பெத்தாலட்சுமி கூறியதாவது:- கடந்தாண்டை விட இந்தாண்டு நடைபெற்ற கலந்தாய்வில் 80 சதவீதத்திற்கும் மேல் பெண்கள் அதிகளவில் விண்ணப்பித்துள்ளனர். இதுவரை 980 இடங்களுக்கு 10,324 பேர் விண்ணப்பித்துள்ளனர். நாளை (திங்கட்கிழமை) தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இதேபோல் வருகிற 17 மற்றும் 18-ந் தேதி இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதில் 17-ந்தேதி அனைத்து கலைப்பிரிவுகளுக்கும், 18-ந் தேதி அனைத்து அறிவியல் பிரிவிற்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story