பி.இ. 2-ம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான கலந்தாய்வு 29-ந் தேதி தொடக்கம்


பி.இ. 2-ம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான கலந்தாய்வு 29-ந் தேதி தொடக்கம்
x

பி.இ. 2-ம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான கலந்தாய்வு 29-ந் தேதி தொடங்கப்படுகிறது.

சிவகங்கை

காரைக்குடி,

பி.இ. 2-ம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான கலந்தாய்வு 29-ந் தேதி தொடங்கப்படுகிறது.

மாணவர் சேர்க்கை

காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி ஒருங்கிணைந்து நடத்தும் இவ்வாண்டிற்கான பி.இ., பி.டெக் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை பணிகள் இணையவழியில் கடந்த ஜூன் 24-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி துறையின் மூலமாக செயல்பட்டு வரும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள 2-ம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான சுமார் 65 ஆயிரம் இடங்களுக்கு 24 ஆயிரத்து 62 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

அவர்களில் தகுதியுள்ள 20 ஆயிரத்து 574 மாணவர்களுக்கு தரவரிசை தயார் செய்யப்பட்டு, தரவரிசையும், இணையதள கலந்தாய்வு விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பித்தல் கடந்த ஜூன் மாதம் 24-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 3-ந் தேதி நிறைவு பெற்றது.

இணையதளம் மூலம்

வருகிற 29 மற்றும் 30-ந் தேதி சிறப்பு கலந்தாய்வு, 31-ந் தேதி முதல் செப்டம்பர் 11-ந் தேதி வரை பொது கலந்தாய்வும் இணையதள வாயிலாக நடைபெற உள்ளது. பின்னர் பி.எஸ்சி. மாணவர்களுக்கான கவுன்சிலிங் 12-ந் தேதி நடைபெற உள்ளது. மாணவர்கள் தங்களது தரவரிசை நிலையையும், அவர்களுக்கான கலந்தாய்வு தேதியையும் இணையதளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

தகுதி பட்டியலில் உள்ள மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள, தங்களின் அலைபேசி மற்றும் கணினி உதவியுடன் கல்லூரி விருப்ப பதிவை சமர்ப்பிக்கலாம். கொரோனா தொற்றிலிருந்து மாணவர்களை பாதுகாக்க இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான கலந்தாய்வினை வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பங்கேற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் நேரில் பங்கேற்க தேவையில்லை.

பதிவிறக்கம்

ஏ.ஐ.சி.டி.இ. வெளியிட்டுள்ள 2020-ம் ஆண்டு அறிவிப்பின்படி டிப்ளமோ படிப்பில் எந்த பாடப்பிரிவில் படித்திருந்தாலும் இரண்டாம் ஆண்டு நேரடி என்ஜினீயரிங் சேர்க்கையில் தாங்கள் விரும்பிய எந்த ஒரு பாடப்பிரிவிலும் சேர்க்கை பெறலாம்.

மேலும், தரவரிசைப்படி மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் கல்லூரிகளை அதற்கு ஒதுக்கப்பட்ட நாட்களில் உறுதி செய்வது அவசியம். இறுதி ஒதுக்கீடு வழங்கப்பட்ட பின்னர் அதற்கான ஆணையை பதிவிறக்கம் செய்து தக்க கல்லூரியில் அனைத்து ஒரிஜினல் சான்றிதழ்களையும் சமர்ப்பித்து சேர்ந்து கொள்ளலாம்.

இந்த தகவலை கல்லூரி முதல்வர் பழனி, பி.இ. இரண்டாமாண்டு நேரடி சேர்க்கைக்கான ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் மற்றும் உமாராணி, ஆதிமூலம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.



Next Story