தேனியில் ஆலோசனை கூட்டம்
தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும்போது, "தேனி மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) மிக கனமழையும், நாளை கன மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அலுவலர்களும் தலைமையிடத்தில் தங்கியிருக்க வேண்டும்.
மழையால் ஏற்படும் சேத விவரங்களை தொலைபேசியில் உடனுக்குடன் தகவல் தெரிவிக்கவேண்டும். மழையால் ஏற்படும் சேதங்களை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும்" என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகன், பெரியகுளம் ஆர்.டி.ஓ. சிந்து, பேரிடர் மேலாண்மை பிரிவு தாசில்தார் ஆர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.