சுண்ணாம்புக்கல் சுரங்க விரிவாக்க கருத்து கேட்பு கூட்டம்
சுண்ணாம்புக்கல் சுரங்க விரிவாக்க கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது லாரிகளின் வேகத்தை கட்டுப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையத்தில் இயங்கி வரும் அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கம் பெரியநாகலூர் கிராமத்தில் உள்ளது. தற்போது, இந்த சுண்ணாம்புக்கல் சுரங்கம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால், அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் தேளூர் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமை தாங்கினார். மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பெரியநாகலூர், காட்டுப்பிரிங்கியம், சின்ன நாகலூர் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.
அப்போது, சிமெண்டு ஆலைகளுக்கு இயக்கப்படும் லாரிகளின் வேகம், பாரம் ஆகியவற்றை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். முறையாக தார்ப்பாய்களை கொண்டு கற்களை மூடி செல்கின்றனவா? எனவும், டிரைவர்கள் அரசின் விதிமுறைகளை கடைபிடிக்கின்றனரா? என வட்டார போக்குவரத்து அலுவலர் கண்காணிக்க வேண்டும். மாசு ஏற்படாத வண்ணம் சுண்ணாம்புக்கல் சுரங்கம் செயல்படவும், சுற்று வட்டார பகுதிகளில் அதிகளவு மரக்கன்றுகளை நட்டு பசுமையை ஏற்படுத்திட ஆலை நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்வதை மாசுகட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்ய வேண்டும். மேலும் வாரி, ஓடை, ஏரி, குளம் நீர்நிலைகளில் இருந்தும், பட்டா நிலத்தில் குறிப்பிட்ட இடைவெளி விடாமல் அத்துவரை சுண்ணாம்புக்கல்லை எடுத்துள்ளனர் என்றும், ஆலை மற்றும் சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைந்துள்ள சுற்று வட்டார கிராமங்களில் சாலை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிவறை, பள்ளிகளுக்கு தேவையான வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.
அதேபோல், சுரங்கம் அமைக்கப்படவுள்ள கிராமத்தில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தாமல் 10 கிலோ மீட்டர் தூரம் தள்ளி கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துவது கண்டிக்கத்தக்கது. சுரங்கங்கள் அருகாமையில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. அதனை மீட்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறினர். இதையடுத்து மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, அனைத்து கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டு மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறினார்.