வடகிழக்கு பருவமழை குறித்த ஆலோசனை கூட்டம்


வடகிழக்கு பருவமழை குறித்த ஆலோசனை கூட்டம்
x

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது:-

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைவரும் தயாராக இருக்க வேண்டும். காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினர் கடலோர காவல் படை, பேரிடர் மீட்பு படை, ஊர் காவல்படை, தேசிய மாணவர் படை ஆகிய பிரிவினரை ஒருங்கிணைத்து தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணியில் ஈடுபட வேண்டும்.

வலுவிழந்த கட்டிடங்கள்

வனத்துறையினர், வெள்ள பாதிப்பு நேரங்களில் தேவைப்படும் சவுக்கு மரங்களை பொதுப்பணித்துறையினருக்கு வழங்கிடவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உணவு தயார் செய்து வழங்கிட தேவையான விறகு வழங்கிட வேண்டும். பொதுப்பணித்துறையினர் மணல் மூட்டைகளை தயார்நிலையில் வைத்திருப்பதுடன் அதனை கொண்டு செல்ல ஏதுவாக வாகனங்களை ஏற்பாடு செய்திட வேண்டும்.

முற்றிலும் வலுவிழந்த அரசு கட்டிடங்கள், பள்ளி கட்டிடங்கள் மற்றும் தனியார் கட்டிடங்களை முன்கூட்டியே கள ஆய்வு செய்து அவற்றை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சாலைகள்

நெடுஞ்சாலைத்துறையினர், சாலைகளில் உள்ள பள்ளங்களை கண்டறிந்து அவற்றை மூட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சாலைகள் சேதம் அடைந்த விவரத்தை உடனுக்குடன் கலெக்டர் அலுவலகத்தில் தெரிவித்திட வேண்டும். தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை கண்டறிந்து அவற்றை உயர்த்தி அமைக்கவும், சேதமடைந்த மின் கம்பங்களை அகற்றி விட்டு புதிதாக மின்கம்பங்களை அமைக்க மின் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மழை, வெள்ள காலங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்லாத வகையில் மீன்வளத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதோடு அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், வேளாண்மை இணை இயக்குனர் சேகர், உதவி ஆணையர் (கலால்) நரேந்திரன், உதவி கலெக்டர்கள் யுரேகா (மயிலாடுதுறை), அர்ச்சனா (சீர்காழி) மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.


Next Story