ரெயில் பாதைக்காக நிலம் எடுக்கும் பணியை விரைந்து முடிக்க ஆலோசனை கூட்டம்
ஆரணி வழியாக நகரி வரை ரெயில் பாதைக்காக நிலம் எடுக்கும் பணியை விரைந்து முடிக்க கலெக்டர் முருகேஷ் தலைமையில் ஆலசோனை கூட்டம் நடந்தது.
ஆரணி வழியாக நகரி வரை ரெயில் பாதைக்காக நிலம் எடுக்கும் பணியை விரைந்து முடிக்க கலெக்டர் முருகேஷ் தலைமையில் ஆலசோனை கூட்டம் நடந்தது.
ஆலோசனை கூட்டம்
திண்டிவனத்தில் இருந்து வந்தவாசி, செய்யாறு, ஆரணி வழியாக ஆந்திர மாநிலம் நகரி வரை ரெயில் பாதை திட்டத்திற்கு நிலம் ஆர்ஜிதம் செய்யும் பணி நீண்டகாலமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் ப.முருகேஷ் தலைமையில் 5-வது முறையாக ஆரணியை அடுத்த இரும்பேடு கிராமத்தில் மட்டும் 244 பேரிடம் இருந்து ரெயில் பாதைக்காக நிலம் எடுக்கும் பணிக்கு சம்பந்தப்பட்டவர்களுடன் பணிகள் விரைந்து முடிக்க ஆலோசனை கூட்டம் நடந்தது. உதவி கலெக்டர் எம்.தனலட்சுமி வரவேற்றார்.
கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் பேசுகையில், 'இரும்பேடு கிராமத்தில் மட்டும் 21 ஹெக்டர் நிலம் தேவைப்படுகிறது. நிலம் வழங்கக்கூடியவர்கள் அவர்களுடைய பெயரில் பட்டா இருக்க வேண்டும். பட்டா பெறுவதில் வாரிசு அடிப்படையில் சிக்கல்கள் இருந்தால் அதுபற்றி தெரிவிக்கலாம்' என்றார்.
பரபரப்பை ஏற்படுத்திய சங்க நிர்வாகி
அப்போது விவசாய அமைப்பு சார்ந்த சங்க நிர்வாகி பேசுகையில், எங்கள் இடத்திற்கு குறைவாக மதிப்பீடு செய்கிறீர்கள். மத்திய அரசு கணக்கீடு செய்யும் தொகையை வழங்க வேண்டும். மாநில அரசு கணக்கீடு செய்யும் தொகையை வழங்க வேண்டாம் என பேசினார். அப்போது கலெக்டர் உங்கள் நிலம் எங்கே உள்ளது பட்டா விவரங்களை என்னிடம் காட்டுங்கள் அதற்கு என்ன மதிப்பீடு செய்ய முடியும் என்று நான் சொல்கிறேன் என கூறினார்.
அதற்கு அவர், இடம் என்னுடையது அல்ல எனது சகோதரிக்குரியது என்று தெரிவித்தார். இதனால் கலெக்டர், அவரை வெளியே அழைத்து செல்லும்படி போலீசாரிடம் கூறினார். உடனே அவரை, போலீசார் வெளியே அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து நிலம் எடுப்பு சம்பந்தமாக நில உரிமையாளர்களிடம் நகல் காப்பிகளை கலெக்டர் பெற்றுக்கொண்டார்.
அதிகாரிகள் பங்கேற்பு
கூட்டத்தில் ஆரணி தாசில்தார் ரா.மஞ்சுளா, ெரயில் பாதை நில எடுப்பு தாசில்தார்கள் வேணுகோபால், தமிழ்மணி, மூர்த்தி, நில அலுவலர் விஜயன், ஆரணி மண்டல துணை தாசில்தார் பிரியா, இருப்பேடு கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன், ஆரணி சார்பதிவாளர் (பொறுப்பு) தெய்வசிகாமணி, ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயலட்சுமி, பிரபாகரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.