விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் தேவையான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று கலெக்டர் லலிதா தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது
மேட்டூர் அணையில் இருந்து இந்த ஆண்டு முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் வழக்கத்தை விட இந்த ஆண்டு 93 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அதற்கான அறுவடை பணிகள் தொடங்கியுள்ளது. ஆனால், மாவட்டத்தில் சமீப நாட்களாக பெய்த மழையின் காரணமாக சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நெல் வயல்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். தற்போது மழை விட்டு வெயில் அடித்து வருவதால் விவசாயிகள் எஞ்சியுள்ள நெல்மணிகளை அறுவடை செய்யும் பணியிலும், மழையால் நனைந்த நெல்லை உலர்த்தும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆலோசனை கூட்டம்
இந்தநிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பாக கலெக்டர் லலிதா தலைமையில் நடந்தது. கூட்டத்தில், வேளாண்மை அலுவலர்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அறுவடை நடைபெற உள்ள இடங்களை தேர்வு செய்து அதற்கு ஏற்றார்போல மாவட்டம் முழுவதும் தேவையான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பது குறித்து முடிவு செய்யப்பட்டது.
கலந்து கொண்டோர்
கூட்டத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜ்குமார், வேளாண்மை இணை இயக்குனர் சேகர், வேளாண்மை துணை இயக்குனரும், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளருமான ஜெயபாலன் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.