சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசனை
சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் அடிப்படை வசதிகள் செய்வது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
சிவகிரி:
சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக சிவகிரி தாலுகா அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. தாசில்தார் செல்வகுமார் தலைமை தாங்கினார். சிவகிரி அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் இசக்கி, மண்டல துணை தாசில்தார் மைதீன் பாட்ஷா, சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ், வருவாய் ஆய்வாளர் சரவணகுமார், கிராம நிர்வாக அலுவலர் சங்கர வடிவு, உதவியாளர் வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், ஏ.ஐ.டி.யு.சி. சங்க பொறுப்பாளர் கண்ணன், சிவகிரி கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு 5 டாக்டர்கள் காலிப்பணியிடங்கள் ஏற்படும் நிலை உள்ளது. அந்த காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், கொரோனா தடுப்பு பிரிவில் உள்ள 10 படுக்கை வசதிகள் கொண்ட அறையை தேவையான மருத்துவ அலுவலர்களை நியமித்து மகப்பேறு பிரிவாக பயன்படுத்த வேண்டும், 108 ஆம்புலன்ஸ் வசதி செய்துதர வேண்டும், நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வருபவர்கள் தங்குவதற்கு குடிநீர், கழிப்பறை வசதிகளுடன் புதிய நிழற்கூடம் அமைத்து தர வேண்டும், 4 மருத்துவ பணியாளர்கள், இரவு காவலர், சமையலர் போன்ற காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், இவற்றுக்கு தென்காசி சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.