மாவட்ட செயலாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆலோசனை!
மாவட்ட செயலாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை,
ஈரோடு, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளதால் பிரசாரம் அனல் பறக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 77 பேர் களத்தில் உள்ளனர்.
தற்போது தேர்தலில் போட்டியிடும் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார்கள். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களை கட்டி உள்ளது. கிழக்கு தொகுதியில் எந்த வீதிகளில் சென்றாலும் அரசியல் கட்சியினர் ஊர்வலமாக சென்று தீவிரமாக வாக்குகள் சேகரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக பிரச்சாரம் செய்துவரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அல்லது அவரது அணியை சேர்ந்தவர்கள் பிரச்சாரம் செய்வார்களா? என்பது தொடர்பாக மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகளுடன் சென்னையில் இன்று (திங்கட்கிழமை) ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்த உள்ளார்.
மேலும் வரும் 24-ம் தேதி மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதை எப்படி சிறப்பாக கொண்டாடுவது என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆலோசனை எடுக்கப்படும் முடிவுகள் குறித்து ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.