கைதிகள் முன்விடுதலை குறித்த ஆலோசனை குழு கூட்டம்


கைதிகள் முன்விடுதலை குறித்த ஆலோசனை குழு கூட்டம்
x
வேலூர்

வேலூர் ஜெயிலில் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த கைதிகள் முன்விடுதலை குறித்த ஆலோசனை குழு கூட்டத்தில் 9 பேர் பங்கேற்றனர்.

ஆலோசனை குழு கூட்டம்

வேலூர் தொரப்பாடியில் உள்ள ஆண்கள் மற்றும் தண்டனை கைதிகள் என 700-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 14 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு முன் விடுதலை அளிப்பது தொடர்பான ஆலோசனை குழு கூட்டம் வேலூர் ஜெயிலில் நடந்தது.

கூட்டத்துக்கு ஆலோசனை குழுவின் தலைவர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயில் சூப்பிரண்டு அப்துல்ரகுமான் முன்னிலை வகித்தார். உறுப்பினர்களாக நீதிபதிகள் கலந்து கொண்டனர். இதில் தகுதியுடைய கைதிகளிடம் நேரடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து ஜெயில் அதிகாரிகள் கூறியதாவது:-

வேலூர் ஜெயிலில் பல ஆண்டுகளான சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளுக்கு நன்னடத்தை அடிப்படையில் முன்விடுதலை அளிக்கப்படும். அவ்வாறு முன் விடுதலைக்கு தகுதியானவர்கள் அரசின் ஆலோசனை குழு முன்பு ஆஜராக வேண்டும். பின்னர் சம்பந்தப்பட்ட கைதியின் முன் விடுதலை குறித்து ஆலோசனை குழு அரசுக்கு பரிந்துரை செய்யும்.

10 ஆண்டுகளுக்கு பிறகு...

வேலூர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஜெயிலில் முன்விடுதலைக்கு சுமார் 30 கைதிகள் தகுதியுடையவர்கள். அவர்களில் முதல்கட்டமாக 3 பெண் கைதிகள் உள்பட 9 பேர் ஆலோசனை குழுவில் ஆஜராகினர். ஆண் கைதிகள் 2 பேர் தற்போது கர்நாடகா மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள ஜெயிலில் உள்ளனர். அவர்களுக்கு காணொலி காட்சி மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கூட்டம் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story