கடன் வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம்


கடன் வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம்
x

தூய்மை பணியாளர்களுக்கு கடன் வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

வேலூர்

வேலூர் நகராட்சி நிர்வாக மண்டலத்துக்கு உட்பட்ட வேலூர் மாநகராட்சி, 22 நகராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மத்திய, மாநில அரசின் கடனுதவி பெறுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார், கமிஷனர் அசோக்குமார், மாநகர் நல அலுவலர் கணேஷ் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் சுஜாதா தலைமை தாங்கி பேசுகையில், துப்புரவு பணியாளர்கள் பல்வேறு இன்னல்களை சந்திந்தாலும் தங்களது பணிகளை சிறப்பாக செய்து வருகிறார்கள். செப்டிங் டேங்கை சுத்தம் செய்யும் போது எதிர்பாராத விதமாக கடந்த காலங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தன. தற்போது அதுபோன்ற நிகழ்வுகள் குறைந்துள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. அதை கட்டாயம் அணிந்து பணிபுரிய வேண்டும். மத்திய, மாநில அரசுகள் தூய்மை பணியாளர்கள், செப்டிங் டேங்க் சுத்தம் செய்பவர்களுக்கு மானியத்தில் கடனுதவி வழங்குகின்றன. இதனை பயன்படுத்தி வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்ள வேண்டும் என்றார்.

அதைத்தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளின் சார்பில் வழங்கப்படும் கடனுதவிகள், மானியம், வட்டி குறித்து அதிகாரிகள் விளக்கி கூறினர்.

இதில், 2-வது மண்டலக்குழு தலைவர் நரேந்திரன், கவுன்சிலர்கள் கணேஷ் சங்கர், சக்கரவர்த்தி, சுகாதார அலுவலர்கள் முருகன், சிவக்குமார், லூர்துசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story