வியாபாரிகளுடன் ஆலோசனை கூட்டம்


வியாபாரிகளுடன் ஆலோசனை கூட்டம்
x

நெல்லை மாநகராட்சியில் வியாபாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அங்குள்ள வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் சாலமோன் உள்பட ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வியாபாரிகள் சங்கத்தலைவர் சாலமோன் பேசுகையில், பாளையங்கோட்டை ஜவகர் மைதானம் மற்றும் போலீஸ் குடியிருப்பில் மார்க்கெட்டில் ஏற்கனவே அங்கிருந்த 540 கடைகளுக்கும் இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். வாரிசு மற்றும் பங்குதாரர்கள் அடிப்படையில் கடை ஒதுக்கீடு செய்ய வேண்டும். காந்தி மார்க்கெட் வியாபாரிகளுக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிதாக கட்டப்படும் கடைகளில் முன்னுரிமை வழங்கி ஒதுக்கீடு செய்ய வேண்டும், என்றார்.

வியாபாரிகள் பேசுகையில், தற்காலிகமாக ஒதுக்கப்பட்ட இடத்தில் ஓட்டலுக்கு கூடுதல் இடம் ஒதுக்கி தர வேண்டும். ஓட்டலுக்கு தேவையான குடிநீர், சுகாதார வசதிகளை ஏற்படுத்த வேண்டும். வியாபாரிகளின் பொருட்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஷட்டர்களை நல்ல முறையில் அமைத்து தரவேண்டும், என்று கூறினார்கள்.

ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி பேசுகையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மார்க்கெட்டில் பணி உடனடியாக தொடங்கப்பட உள்ளதால் ஜவகர் மைதானத்தில் புதிய கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த இடத்திற்கு உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும். மேலும் இடிக்கப்பட்டு காலியாக உள்ள காவலர் குடியிருப்பில் அவர்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் தற்காலிகமாக புதிய கடைகள் அமைக்கப்பட உள்ளது. அந்த இடத்திற்கும் வியாபாரிகளுடன் செல்ல வேண்டும், என்றார்.

கூட்டத்தில் உதவி ஆணையாளர் ஜஹாங்கிர் பாஷா, உதவி செயற்பொறியாளர் சாந்தி, உதவி வருவாய் அலுவலர் மணிகண்டன், இளநிலை பொறியாளர் விவேகானந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story