3 விவசாயிகளுக்கு, அதிகாரிகள் ரூ.1½ லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
3 விவசாயிகளுக்கு, அதிகாரிகள் ரூ.1½ லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூரில் உள்ள கம்பன் தெருவை சேர்ந்த மெய்யனின் மகன் கார்த்திகேயன். இவர் நக்கசேலத்தில் உள்ள தனக்கு சொந்தமான வயலில் கடந்த 2021-ம் பயிரிட்டிருந்த ஆண்டு சிறிய வெங்காயத்திற்கு காப்பீடு செய்து, பிரீமியம் தொகையாக ரூ.7,810-ஐ மத்திய அரசின் வேளாண்மை காப்பீட்டு நிறுவனத்திற்கு செலுத்தினார். இதேபோல் மெய்யன் தனது வயலில் கடந்த 2021-ம் சாகுபடி செய்திருந்த சின்ன வெங்காயத்திற்கு, ரூ.1,464-ஐ பிரீமியம் செலுத்தி பயிர் காப்பீடு பெற்றிருந்தார். அப்போது கனமழை பெய்து வெங்காயப்பயிர்கள் அழுகி, விளைச்சல் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதேபோல் பொம்மனப்பாடி கிராமத்தை சேர்ந்த விவசாயி குணசேகரன், தனது மனைவி ஹேமலதா பெயரில் உள்ள வயலில் 2020-ம் ஆண்டு சிறிய வெங்காயத்திற்கு பயிர் காப்பீடு செய்து, ரூ.5 ஆயிரத்து 91-ஐ பிரீமியமாக செலுத்தியிருந்தார். பருவ மாறுபாடு காரணமாக சின்ன வெங்காயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கார்த்திகேயன், மெய்யன் மற்றும் ஹேமலதா ஆகிய 3 பேரும் தனித்தனியே வேளாண்மை காப்பீட்டு நிறுவனத்தை அணுகி பயிர்காப்பீட்டு தொகையை அனுமதிக்க முறையிட்டனர். ஆனால் பயிர்காப்பீட்டு தொகை வழங்கப்படாமல் 3 பேரும் அலைக்கழிக்கப்பட்டனர் இதனால் மன உளைச்சலுக்கு ஆளான 3 பேரும் வக்கீல் அய்யம்பெருமாள் மூலம், பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு செய்து வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணைய தலைவர் ஜவகர், உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர் கொண்ட குழுவினர் விசாரித்தனர். இதில் மனுதாரர்கள் கார்த்திகேயன், அவரது தந்தை மெய்யன், ஹேமலதா ஆகிய 3 பேருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காகவும், சேவை குறைபாடு காரணமாகவும், வேளாண்மை காப்பீட்டு நிறுவனத்தின் சென்னை மண்டல மேலாளர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஆகியோர் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ, தலா ரூ.50 ஆயிரம் மற்றும் வழக்கு செலவுத்தொகை தலா ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை தீர்ப்பு வெளியான 45 நாட்களுக்குள் வழங்க உத்தரவிட்டனர். அவ்வாறு வழங்காவிட்டால், வழக்கு தாக்கல் செய்த 2022 டிசம்பர் மாதத்தில் இருந்து 8 சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.