பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.18 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு


பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.18 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
x

சிறுநீரக சிகிச்சையில் அலட்சியம் காட்டிய தனியார் மருத்துவமனை, பாதிக்கப்பட்டபெண்ணுக்கு ரூ.18 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கரூர்

சிறுநீரக சிகிச்சை

கரூர்-திருச்சி மெயின் ரோடு சுங்ககேட் பகுதியை சேர்ந்தவர் நல்லாத்தாள் (வயது 47). இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். நல்லாத்தாளுக்கு இடுப்பு பகுதியில் தீராத வலி இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ந் தேதி சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

அப்போது ஏற்கனவே எடுத்துக் கொண்டு வந்த ஸ்கேன் ரிப்போர்ட்டையும் மருத்துவரிடம் காட்டியுள்ளார். அதை பார்த்த மருத்துவமனை மருத்துவர், நல்லாத்தாளுக்கு 2 சிறுநீரகங்களிலும் கல் அடைப்பு உள்ளதாகவும், உடனடியாக லேசர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் கூறி அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இந்நிலையில் மறுநாள் அறுவை சிகிச்சை மேற்கொண்ட போது நல்லாத்தாளின் சிறுநீர் குழாயில் துவாரம் ஏற்பட்டுள்ளது எனினும் மருத்துவர் இதனை நல்லாத்தாளிடம் தெரிவிக்காமல் அவரை மருத்துவமனையில் உள்நோயாளியாக வைத்து சிகிச்சை அளித்துள்ளார். அப்போது நல்லாத்தாளுக்கு கடுமையான வலி ஏற்பட்டுள்ளது.

3 அறுவை சிகிச்சைகள்

இதுகுறித்து நல்லாத்தாள் மருத்துவரிடம் கேட்டபோது, வலி தானாக சரியாகி விடும் என மருத்துவர் கூறியுள்ளார். இதனை அடுத்து ஜனவரி மாதம் 27-ந் தேதி மருத்துவமனையில் இருந்து நல்லாத்தாள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பி உள்ளார். வீட்டிற்கு வந்த நல்லாத்தாள் உட்காரவோ, நிற்கவோ, நடக்கவோ முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதையடுத்து மீண்டும் அதே மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் கேட்டபோது, சிறுநீரக குழாயில் துவாரம் உள்ளதை மருத்துவர் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து மருத்துவரின் பரிந்துரையின்பேரில் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் செலவில் 3 அறுவை சிகிச்சைகள் நல்லாத்தாளுக்கு செய்யப்பட்டுள்ளது.

இழப்பீடு வழங்க உத்தரவு

இதில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை மருத்துவரின் கவன குறைவான லேசர் அறுவை சிகிச்சையின் காரணமாக உடல் வலி, மன உளைச்சல் மற்றும் பண செலவு ஆகியவை தனக்கு ஏற்பட்டதாக கூறி ரூ.20 லட்சம் மருத்துவமனை சார்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி நல்லாத்தாள் நுகர்வோர் கோர்ட்டில் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3-ந் தேதி மனு தாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த ஆணையத் தலைவர் பாலகிருஷ்ணன், உறுப்பினர் ரத்தினசாமி ஆகியோர் மருத்துவர் தனது பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதால் நல்லாத்தாளுக்கு ஏற்பட்ட உடல் வலி, மன உளைச்சல், பண செலவு ஆகியவற்றிற்காக இழப்பீடாக ரூ.18 லட்சத்து 3 ஆயிரத்து 181-ஐ வழங்க வேண்டும் எனவும், மேலும் வழக்கு தாக்கல் செய்த தேதி முதல் இழப்பீடு தொகை வழங்கும் நாள் வரை 7.5 சதவீத வட்டியுடன் 2 மாதங்களுக்குள் இத்தொகையை வழங்க வேண்டும் எனவும், செலவுத் தொகையாக ரூ.10,000 வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தனர்.


Next Story