கஞ்சா வியாபாரியுடன் தொடர்பு: அல்லிநகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நெல்லைக்கு இடமாற்றம்
கஞ்சா வியாபாரியுடன் தொடர்பு இருப்பதாக அல்லிநகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நெல்லைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்
தேனி அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசார் சிலர் கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு சட்டவிரோதமான செயலில் ஈடுபட்டதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவுக்கு ரகசிய புகார்கள் வந்தன. இதையடுத்து அல்லிநகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணன் மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும், போலீஸ்காரர்கள் ராஜா, ஸ்ரீதர், வாலிராஜன் ஆகிய 3 பேரை ஆயுதப்படை பிரிவுக்கும் தற்காலிக பணி இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
மேலும் இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தினார். அதில், கஞ்சா வியாபாரி ஒருவரை கைது செய்வதற்காக, மற்றொரு கஞ்சா வியாபாரியிடம் இருந்து போலீசாரே கஞ்சாவை கேட்டு வாங்கியதாகவும், அவ்வாறு வாங்கிய கஞ்சாவை போலீஸ்காரர் ராஜா, தனது வீட்டில் வைத்து இருந்ததாகவும் தெரியவந்தது. இதனால் போலீஸ்காரர் ராஜா கடந்த மாதம் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் மீதான குற்றச்சாட்டு குறித்து தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க்குக்கு தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிக்கை அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணனை நெல்லை மாவட்டத்துக்கு பணி இடமாற்றம் செய்து போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் உத்தரவிட்டார்.