சிறுநாயக்கன்குளத்தில் கழிவுநீர் கலப்பதால் மாசடைந்த தண்ணீர்
பழனி அருகே, சிறுநாயக்கன்குளத்தில் கழிவுநீர் கலப்பதால் தண்ணீர் மாசடைந்து வருகிறது.
பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில், கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பழனியில் உள்ள அணைகள் நிரம்பி ஆறுகள் மற்றும் குளங்களுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதன்படி பழனி வையாபுரி குளம், சிறுநாயக்கன்குளம் ஆகியவற்றுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் பழனி-பழைய தாராபுரம் சாலையில் உள்ள சிறுநாயக்கன்குளத்தில், தண்ணீருடன் சேர்ந்து வெண்ணிற நுரையும் பொங்கி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சிறுநாயக்கன்குளத்தில் இருந்து பாப்பாகுளத்துக்கு மறுகால் பாயும் இடத்தில் நுரைகள் தேங்கி, வாய்க்கால் முழுவதும் பல அடி உயரத்துக்கு நிற்கிறது.
விவசாயத்துக்கு பயன்படும் தண்ணீரில், கழிவுநீர் கலப்பதால் இதுபோன்று நுரை ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. பழனி நகராட்சி நிர்வாகம் சார்பில், நகர்ப்பகுதியில் சேகரிக்கப்படுகிற கழிவுகள் அந்த குளத்தில் கொட்டப்படுவதால் தண்ணீர் மாசடைந்து வருகிறது. மேலும் அந்த குளத்தினால் கோதைமங்கலம் கிராமத்தில் வசிப்பவர்களுக்கு, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்ைக எழுந்துள்ளது.