திற்பரப்பு அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் அதிகபட்சமாக இரணியலில் 76 மில்லி மீட்டர் மழை பதிவானது. திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் அதிகபட்சமாக இரணியலில் 76 மில்லி மீட்டர் மழை பதிவானது. திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
மழை
தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. அதன்படி குமரி மாவட்டத்திலும் தினமும் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றும் கன்னியாகுமரி, கொட்டாரம், அகஸ்தீஸ்வரம், சாமிதோப்பு உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.
நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலையில் வெயில் அடித்தது. ஆனால் பிற்பகல் 3 மணியளவில் வானில் கருமேகங்கள் திரண்டு பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதுபோல் மாா்த்தாண்டம், தக்கலை உள்ளிட்ட பகுதிகளிலும், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் மலையோர பகுதிகளிலும் மழை பொழிவு இருந்தது.
மழை அளவு
குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக இரணியலில் 76 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதேபோல் மாவட்டத்தில் பிற இடங்களில் பதிவான மழையளவு விவரம் வருமாறு:-
பூதப்பாண்டி-3.2, களியல்-24.2, கன்னிமார்-3.6, குழித்துறை-18.2, நாகர்கோவில்-1, புத்தன்அணை-10.4, சுருளகோடு-12.4, தக்கலை-2, குளச்சல்-12.4, பாலமோர்-22.4, திற்பரப்பு-24.8, கோழிப்போர்விளை-7.8, அடையாமடை-19.2, குருந்தன்கோடு-5.2, முள்ளங்கினாவிளை-10.2, ஆனைகிடங்கு-15 என்ற அளவில் மழை பெய்திருந்தது.
இதேபோல அணை பகுதிகளை பொறுத்த வரையில் பேச்சிப்பாறை-19.2, பெருஞ்சாணி-16.2, சிற்றார் 1-18.8, சிற்றார் 2-19.6, மாம்பழத்துறையாறு-16.4, முக்கடல்-2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.
அணைகள் நிலவரம்
மழை காரணமாக அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது. இதனால் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 42.31 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 921 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1016 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 70.04 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 930 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1872 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால், அருவியில் நேற்று 9-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினமான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிக்கு வந்தனர். அவர்கள் அருவியின் அழகை தொலைவில் நின்று பார்த்துவிட்டு குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
2 வீடுகள் சேதம்
மாவட்டத்தில் பெய்யும் தொடர் மழையால் அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் ஒரு வீடும், திருவட்டார் தாலுகாவில் ஒரு வீடும் பாதியளவு இடிந்து சேதமடைந்தன. மாவட்டத்தில் இதுவரை மழைக்கு 7 வீடுகள் இடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.