தொடரும் கனமழை: தாழ்வான பகுதிகளில் நீரை அகற்ற தயார் நிலையில் மோட்டார் பம்புகள் - சென்னை மாநகராட்சி
கனமழை தீவிரமடைந்துள்ளதால், தாழ்வான பகுதிகளில் நீரை அகற்ற மோட்டார் பம்புகள் தயார் நிலையில் இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கனமழை கொட்டி வருகிறது. இன்று காலை ஓரளவு வெயில் அடித்தநிலையில், மாலையில் தீடீரென கனமழை கொட்டியது.
மெரினா, அடையாறு, சாந்தோம், ஜெமினி, தேனாம்பேட்டை, எழும்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை கொட்டியது. புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. தற்போது தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக பல பகுதிகளில் கனமழை நீடித்து வருகிறது.
இந்நிலையில் தாழ்வான பகுதிகளில் நீரை அகற்ற மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் பதிவில், "சென்னையில் மழையின் தீவிரம் அதிகமாக இருப்பதால், தாழ்வான பகுதிகளில் நீரை அகற்ற பயன்படுத்துவதற்கு உயர் சக்தி மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மழை நீர் வடிய 2-4 மணி நேரம் ஆகும். தயவுசெய்து எங்களை ஆதரிக்கவும். அவசரகாலத்தில் எங்களை தொடர்பு கொள்ளவும்" என்று அதில் பதிவிடப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட கலெக்டர் விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.