தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம்
கள்ளிமந்தையம் அருகே தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம் நடத்தப் படு ம் என்று ஆலோ சனை கூட்டத்தில் விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
ஆலோசனை கூட்டம்
தமிழக அரசு சார்பில், கள்ளிமந்தையம் அருகே ஈசக்காம்பட்டியில் தொழிற்பேட்டை (சிப்காட்) அமைக்கப்பட உள்ளது. இதற்காக அந்த பகுதியில் 1,000 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
இதற்கு அப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே விவசாயிகளுடனான ஆலோசனை கூட்டம், பழனி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சேக் முகைதீன் தலைமை தாங்கினார்.
பழனி ஆர்.டி.ஓ. சரவணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தையம், பழனி பகுதியை சேர்ந்த விவசாயிகள், நாம் தமிழர் கட்சி, பா.ஜ.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.
வாழ்வாதாரம் பாதிப்பு
கூட்டத்தின்போது, கள்ளிமந்தையம் பகுதியில் காய்கறி விவசாயம் அதிகமாக நடைபெறுகிறது. எனவே விளை நிலத்தில் தொழிற்பேட்டை அமைக்க கூடாது.
இங்கு தொழிற்பேட்டை அமைக்கப்பட்டால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. எனவே தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து பேசும்போது, கள்ளிமந்தையம் பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க பெரும் எதிர்ப்பு நிலவுகிறது. எனவே அங்கு தொழிற்பேட்டை அமைக்கப்பட மாட்டாது என்ற அறிவிப்பு வரும்வரை போராட்டம் நடைபெறும் என்றார்.
தமிழகம் முழுவதும் போராட்டம்
இதேபோல் பா.ஜ.க. நிர்வாகிகள் பேசும்போது, தொழிற்பேட்டை அமைக்க பழனி முருகன் கோவில் நிலத்தை கையகப்படுத்தினால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
பின்னர் அதிகாரிகள் பேசும்போது, தொழிற்பேட்டை அமைப்பது பற்றி விவசாயிகளிடம் விளக்க கூட்டம் தான் நடத்தி வருகிறோம். எனவே தொழிற்பேட்டை அமைக்க ஆட்சேபனை தெரிவிக்கும் விவசாயிகள், அரசியல் கட்சியினர் மனுக்களாக மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்கலாம். இந்த மனுக்கள் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
இந்தநிலையில் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கள்ளிமந்தையம் அருகே உள்ள கப்பல்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், கிராம மக்கள் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல தேவத்தூர், வள்ளியக்காவலசு, கோடாங்கிபட்டி உள்ளிட்ட கிராமங்களிலும் கருப்புக்கொடி ஏற்றப்பட்டிருந்தது.