தொடரும் வேலைநிறுத்தம்: நூற்பாலை அதிபர்களுடன் இன்று அமைச்சர்கள் பேச்சுவார்த்தை


தொடரும் வேலைநிறுத்தம்: நூற்பாலை அதிபர்களுடன் இன்று அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 21 July 2023 7:52 AM IST (Updated: 21 July 2023 7:53 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் உள்ள நூற்பாலைகளில் தினந்தோறும் லட்சக்கணக்கில் நூல்கள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

சென்னை,

தமிழகம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அமைந்து உள்ளன. இங்கு 1.5 லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் சிறு, குறு நூற்பாலைகள் மூலப்பொருட்களின் விலைஉயர்வு, மின்கட்டண உயர்வு, வங்கி கடன் வட்டி உயர்வு, துணிகள் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு ஆகியவற்றை கண்டித்து கடந்த 15-ந் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காலவரையற்ற வேலைநிறுத்தம் காரணமாக அங்கு வர்த்தகம் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு வேலை பார்த்து வரும் தொழிலாளிகளின் வேலைவாய்ப்பும் கேள்விக்குறியாக உள்ளது.

காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நூற்பாலை அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஜவுளித்துறை அமைச்சர் காந்தி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது.

அதன்படி சென்னை தலைமை செயலகத்தில் நூற்பாலை அதிபர்களுடன் அமைச்சர்கள், அதிகாரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதற்காக தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம், இந்திய நூற்பாலை உரிமையாளர்கள் சங்கம், ஓபன் என்ட் நூற்பாலைகள் சங்கம், மறுசுழற்சி ஜவுளித்தொழில் கூட்டமைப்பு, இந்திய ஜவுளித்தொழில் முனைவோர் கூட்டமைப்பு, தென்னிந்திய மில்கள் சங்கம், தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.


Next Story