கிருஷ்ணகிரி நகரில்சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் தொடரும் விபத்துக்கள்அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
கிருஷ்ணகிரி நகரில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் தொடர்ந்து விபத்துக்கள் நடந்து வருகின்றன. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி நகரில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் தொடர்ந்து விபத்துக்கள் நடந்து வருகின்றன. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சாலைகளில் சுற்றும் கால்நடைகள்
கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் 1½ லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். கிருஷ்ணகிரி நகரில் பெங்களூரு சாலை, ராயக்கோட்டை சாலை, சென்னை சாலை, காந்தி ரோடு உள்ளிட்ட பிரதான சாலைகள் அமைந்துள்ளன. இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் சென்று வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த சாலைகளில் அதிக அளவில் கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பலரும் விபத்தை சந்திக்கிறார்கள். குறிப்பாக மாடுகளை பலரும் சாலைகளில் அவிழ்த்து விடுகிறார்கள். இந்த மாடுகள் வாகன ஓட்டிகள் செல்லும்போது குறுக்கே பாய்ந்து விபத்து ஏற்படுத்தி விடுகின்றன.
அதிகாரிகள் சாவு
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் மாடு ஒன்று ஒரு குழந்தையை முட்டி வீசியது. அந்த குழந்தை படுகாயம் அடைந்தது. இதுபோல கிருஷ்ணகிரியில் சாலையில் வாகனத்தில் அடிபட்டு பல மாடுகள் இறந்துள்ளன. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கிருஷ்ணகிரியில் நடந்த சாலை விபத்தில் 2 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இறந்தனர். அந்த விபத்தில் கூட மாடு ஒன்று குறுக்கே வந்ததால் லாரியை திருப்பும்போது மோட்டார் சைக்கிளில் மோதி 2 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களும் இறந்ததாக கூறப்படுகிறது.
இப்படி தொடர்ந்து விபத்துக்களை ஏற்படுத்தி வரும் கால்நடைகளை சாலைகளில் அவிழ்த்து விடக்கூடாது என்று நகராட்சி சார்பில் பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தொடர்ந்து சாலைகளில் ஆடு மாடுகளை அவிழ்த்து விடுகிறார்கள். எனவே நகராட்சி அதிகாரிகள் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.