பட்டணம் முனியப்பம்பாளையத்தில் அடிப்பம்பை அகற்றாமல் கான்கிரீட் அமைத்தவரின் ஒப்பந்தம் ரத்து
பட்டணம் முனியப்பம்பாளையத்தில் அடிப்பம்பை அகற்றாமல் கான்கிரீட் அமைத்தவரின் ஒப்பந்தம் ரத்து
ராசிபுரம்:
ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் பட்டணம் முனியப்பன்பாளையம் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சில தினங்களாக சாக்கடை கால்வாயின் மேல் பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடந்து வந்தது. இந்த நிலையில் இந்திரா காலனி பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்கும்போது சாலையில் ஏற்கனவே சில ஆண்டுகளாக பயன்படாத நிலையில் இருந்து வந்த அடிப்பம்பு அகற்றப்படாமல் கான்கிரீட் போடப்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஒப்பந்ததாரரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் சரியான பதில் அளிக்காததால் அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் ராசிபுரம் ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், ராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) வனிதா, பொறியாளர் நைனாமலை ராஜ் ஆகியோர் இந்திரா காலனிக்கு சென்று அடிப்பம்பை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பிறகு கான்கிரீட் அமைக்கப்பட்ட இடத்தில் இருந்த அடிப்பம்பை அகற்றி விட்டனர். கான்கிரீட் அமைக்கும் பணியை பட்டணம் மதியழகன் என்பவர் எடுத்து செய்து வந்தார். இந்த புகாரின் அடிப்படையில் அவரது ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.