ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும்
தேனி மாவட்டத்தில் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்று மின் ஊழியர் மத்திய அமைப்பினர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் நிர்வாகிகள் நேற்று வந்தனர். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிந்துவிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், 'தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்த ஊழியர்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். அவர்கள் மின்உற்பத்தி, மின்பாதைகள் அமைத்தல், பராமரித்தல் மற்றும் வினியோக பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு பணியாற்றும் பணியாளர்களை அடையாளம் கண்டு மின்வாரியத்தில் நிரந்தரப்படுத்த பலமுறை கடிதம் அனுப்பியும், இயக்கம் நடத்தியும் தீர்வு காணப்படவில்லை. தி.மு.க. தேர்தல் அறிக்கையில், 10 ஆண்டுகளுக்கு மேல் பொதுத்துறையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்வோம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த அடிப்படையில் ஒப்பந்த ஊழியர்கள் விவரங்களை முதல்-அமைச்சர் கவனத்துக்கு மாவட்ட கலெக்டர் கொண்டு சென்று, ஒப்பந்த ஊழியர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைக்க வேண்டும்' என்று கூறியிருந்தனர்.