ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தின் வேலூர் கோட்ட ஆலோசனை கூட்டம் வேலூரில் நேற்று நடந்தது. வேலூர் கோட்ட தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். கோட்ட பொருளாளர் கபாலி, செயல் தலைவர் சேகர், உதவி செயலாளர் அருள்ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் முனிரத்தினம் கலந்து கொண்டு சங்க செயல்பாடுகள், தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார்.
கூட்டத்தில் அஞ்சல் துறையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். பல ஆண்டுகளாக பணிபுரியும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும். குரூப் இன்சூரன்ஸ் ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். அனைவருக்கும் மருத்துவ வசதிகள் வழங்க வேண்டும். 180 நாட்கள் சேமிப்பு விடுப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் வேலூர் தலைமை தபால் நிலையத்தில் இருந்து கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக கூட்டம் நடந்த பெல்லியப்பா கட்டிடத்துக்கு சென்றனர். இதில், வேலூர் கோட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.