மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் பலி: உறவினர்கள் சாலை மறியல்


மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் பலி:  உறவினர்கள் சாலை மறியல்
x

கரூரில் மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் பலியானார். நிவாரணம் வழங்கக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கரூர்

ஒப்பந்த ஊழியர்

கரூர் தாந்தோணிமலை அசோக் நகரை சேர்ந்தவர் ரமேஷ்கண்ணன் (வயது 35). இவர் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் கரூர் பசுபதிபாளையம் அருணாச்சலம் நகர் பகுதியில் நேற்று மின் கம்பத்தில் பழுது நீக்கும் பணிகளை ரமேஷ்கண்ணன் மேற்கொண்டார். அப்போது அவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சாலை மறியல்

இதுகுறித்து பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் ரமேஷ்கண்ணனின் உறவினர்கள் உரிய நிவாரணம் வழங்கக்கோரியும், அதுவரை ரமேஷ்கண்ணனின் உடலை பெறமாட்டோம் என மறுப்பு தெரிவித்து கரூர்- திருச்சி நெடுஞ்சாலையில் காந்திகிராமம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ், மின்வாரிய அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உங்களது கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் ரமேஷ்கண்ணனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் காந்திகிராமம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story